Published : 12 Nov 2025 12:34 AM
Last Updated : 12 Nov 2025 12:34 AM
சென்னை: தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகளைக் கண்டித்து மாநிலம் முழுவதும் 43 இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதைக் கண்டித்து திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாநிலம் முழுவதும் 43 இடங்களில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. சென்னையில் 4 இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு எஸ்ஐஆர்-க்கு எதிராக பதாகைகளை ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சைதாப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, திக துணைத் தவைவர் கலி.பூங்குன்றன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றினர். இதில் செல்வப்பெருந்தகை பேசும்போது, ‘‘வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை வேண்டாம் என கூறவில்லை. தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ள நிலையில், இப்பணிகளை மேற்கொள்ளும்போது பொதுமக்களிடம் குழப்பம் ஏற்படும். அதனால் இதை தேர்தல் முடிந்த பிறகு செய்ய வேண்டும்’’ என்றார்.
சென்னை தென்மேற்கு மற்றும் மேற்கு மாவட்டம் சார்பில் சேப்பாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் பங்கேற்றனர். சென்னை கிழக்கு மற்றும் வடக்கு மாவட்ட திமுக சார்பில் தங்கசாலையில் நடைபெற்ற போராட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதில் திருமாவளவன் பேசும்போது, ‘‘எஸ்ஐஆர் மூலமாக சிறுபான்மை சமூகத்தினரின் வாக்குரிமை இல்லாதவர்களாக மாற்றப்படும் அபாயமுள்ளது. பாஜகவெறும் அரசியல் கட்சி அல்ல.இந்தியாவை விரும்பும்படிமாற்றியமைக்க உருவாக்கப்பட்ட ஒரு பாசிச இயக்கம். அதைவீழ்த்தக் கூடிய ஒரே நம்பிக்கை முதல்வர் ஸ்டாலின்தான்’’ என்றார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசும்போது, ‘‘அரசியலமைப்புச் சட்டத்தின் அடித்தளத்தை தகர்க்க பாஜக வேலை பார்க்கிறது. 75 லட்சம் வாக்காளர்களை நீக்க வேண்டும் என்று கங்கணம் கட்டும் பாஜக அரசுக்கு எடுபிடியாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது’’ என்றார். மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேசும்போது, ‘‘குடியுரிமையைப் பறிக்கும் ஆபத்து எஸ்ஐஆரில் உள்ளது. ஆளுங்கட்சியின் கைத்தடியாக தேர்தல் ஆணையம் செயல்படுவதை அனுமதிக்க முடியாது. எஸ்ஐஆரை தமிழகம் ஏற்காது. எனவே, அதை தேர்தல் ஆணையம் திரும்பப்பெற வேண்டும்’’ என்றார்.
இதேபோல், சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக சார்பில் மாதவரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு எம்எல்ஏ எஸ்.சுதர்சனம் தலைமை தாங்கினார். எம்எல்ஏ கே.பி.சங்கர், சமத்துவமக்கள் கழகம் தலைவர் எர்ணாவூர் நாராயணன் உட்பட ஏராளமானோர் இதில் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT