Last Updated : 11 Nov, 2025 01:57 PM

3  

Published : 11 Nov 2025 01:57 PM
Last Updated : 11 Nov 2025 01:57 PM

‘வாக்குரிமையை பறிப்பதற்கான சதியில் இபிஎஸ் ஒரு பார்ட்னர்’ - அமைச்சர் ரகுபதி 

சென்னை: “வாக்குரிமையை பறிப்பதற்கு துணை போகும் பாஜக சதியில் எடப்பாடி பழனிசாமியும் ஒரு பார்ட்னர். இந்தியாவிலேயே SIR ஐ ஆதரித்து வழக்கு தாக்கல் செய்த ஒரே கட்சி அதிமுகதான் என்ற வரலாற்றை எழுதிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி.” என்று அமைச்சர் ரகுபதி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையின் விவரம் பின்வருமாறு: சரியான வாக்காளர் பட்டியலுடன் முறைகேடுகள் இல்லாத தேர்தலை நடத்தவும், அதற்காக வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்பதிலும் திமுகவுக்கு எப்போதுமே மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்குச் சில மாதங்களே உள்ள நிலையில், போதுமான கால அவகாசம் தராமல், அவசர அவசரமாக SIR பணியை தேர்தல் ஆணையம் மேற்கொள்வதில் உள்நோக்கம் இருக்கிறது என்பதாலேயே திமுக எதிர்க்கிறது.

பாஜகவுக்கு எதிரான வாக்காளர்களை நீக்கம் செய்யும் சதியைத் தடுக்கவும், தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்கவும், SIR-க்கு எதிராக அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்களைக் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து நடத்தியிருக்கிறது திமுக.

அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி, ஜனநாயகத்தின் அடிப்படையான வாக்குரிமையைப் பறிக்கும் SIR -ஐ எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.

ஆரியம், திராவிடம் பற்றிக் கேட்டால், “அதற்கெல்லாம் புராணம் படிக்க வேண்டும். ஆய்வு செய்ய வேண்டும்” எனச் சொன்ன பழனிசாமிக்கு, ஜனநாயகம் பற்றி மட்டும் தெரிந்துவிடுமா?. ஜனநாயகத்தின் மீது கொஞ்சமும் அக்கறை இல்லாத அதிமுக, தமிழர்களின் வாக்குரிமையைப் பற்றியா கவலைப்படும்?. தமிழர்களின் வாக்குரிமை காப்பாற்றப்பட வேண்டும் எனத் தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்துவது தொடங்கி, உச்ச நீதிமன்றத்தின் கதவைத் தட்டுவது வரை திமுக போராடிக் கொண்டிருக்கிறது.

ஆனால், அதிமுகவோ SIR-ஐ ஆதரித்து வழக்கு தொடருந்திருக்கிறது. ‘உங்க ஓட்டு உங்களுக்கு இல்லை’ எனச் சொல்லி வாக்குரிமையைப் பறிப்பதற்குத் துணை போகும் சதியில் எடப்பாடி பழனிசாமியும் ஒரு பார்ட்னர். பாஜக கூட SIR-ஐ ஆதரித்து வழக்கு போடாத நிலையில், பாஜகவின் கிளைக் கழகமாகவே செயல்படும் அதிமுகவும் அதன் ‘சிறந்த அடிமை’யான பழனிசாமியும் நீதிமன்றம் வரை சென்றிருக்கிறார்கள்.

‘இந்தியாவிலேயே கார் வைத்திருக்கும் கரகாட்டக் கோஷ்டி நாம்தான்’ என்ற காமெடி போல, இந்தியாவிலேயே SIR ஐ ஆதரித்து வழக்கு தாக்கல் செய்த ஒரே கட்சி அதிமுகதான் என்ற வரலாற்றை எழுதிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி.

தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற உண்மை தெரிந்துவிட்டதால், SIR மூலம் வெற்றி பெற்றுவிடலாம் என பாஜகவை நம்பி, சித்து விளையாட்டில் இறங்கியிருக்கிறார் துரோகம் செய்வதில் முனைவர் பட்டம் பெற்ற பழனிசாமி.

கூவத்தூரில் ‘ஊர்ந்தெடுக்கப்பட்டு’ முதல்வர் ஆனது போல, SIR மூலம் கொள்ளைப்புற முதல்வராகத் துடிக்கிறார். பாஜகவின் வாக்குத் திருட்டு வியூகம் அதிமுகவுக்கு பயன்படும் என்ற நப்பாசையில் SIR-ஐ ஆதரிக்கிறார் பழனிசாமி.

முஸ்லிம்களைப் பாதிக்கும் வகையில் மோடி அரசு கொண்டு வந்த CAA சட்டத்தை ஆதரித்துவிட்டு, ‘முஸ்லிம்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை’ எனப் பச்சைப் பொய் சொன்ன பழனிசாமிதான், அந்த CAA சட்டத்தை SIR வழியாக அமல்படுத்தத் துடிக்கும் பாஜகவுக்குத் துணை போகிறார்.

SIR நடவடிக்கையால் தமிழர்களின் வாக்குரிமைக்கு மட்டுமல்ல; அவர்களின் குடியுரிமைக்கே ஆபத்து ஏற்படலாம் என்கிற பேராபத்து சூழ்ந்திருக்கிறது.

வேளாண் சட்டம், உதய் மின் திட்டம், மதுரை அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்கப் பிரச்சினைக்கு காரணமான MINES AND MINERALS திருத்தச் சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்ட பாஜக ஒன்றிய அரசு கொண்டு வந்த சட்டங்களையும் திட்டங்களைக் கண்களை மூடி ஆதரித்து, சிறந்த அடிமையாக விளங்கி வரும் எடப்பாடி பழனிசாமி, தற்போது SIR-லும் ’ஆலம்பனா நான் உங்கள் அடிமை’ என முன்னுக்கு வந்து நிற்கிறார்.

பிஹாரில் SIR பணி நடைபெற்ற போது, பாஜகவின் கூட்டணியில் இடம் பெற்ற ஐக்கிய ஜனதா தளம் வழக்கு தாக்கல் செய்யவில்லை. பாஜக கூட்டணியில் இடம்பெற்ற ஆந்திர மாநிலத்தின் தெலுங்கு தேசம் கட்சி SIR நடவடிக்கையை ஆதரித்து வழக்கு போடவில்லை. மாறாக, இஸ்லாமியர்களின் குடியுரிமையை சோதிக்கும் வகையில் SIR நடவடிக்கையை தேர்தல் ஆணையம் பயன்படுத்தக் கூடாது என்று கவலை தெரிவித்துள்ளது. ஆனால், ‘அடிமை சேவை செய்வதே என் தவ வாழ்க்கை’ என வாழ்ந்து கொண்டிருக்கும் பழனிசாமி, SIR-ஐ ஆதரித்தோடு வழக்கு போட்டு ராஜ விசுவாசத்தைக் காட்டுவது வெட்கக்கேடு.

மக்களைப் பற்றியும் மக்கள் நலனைப் பற்றியும் துளியும் கவலையில்லாமல் டெல்லி எஜமானர்களின் மனம் குளிர மட்டுமே அடிமை சேவகம் செய்து வரும் பழனிசாமி தனது கட்சியை அடமானம் வைத்தது மட்டுமின்றி, தமிழர்களின் வாக்குரிமையைப் பறித்து தமிழ்நாட்டை டெல்லியின் அடிமையாக்க முயல்கிறார். இந்த அற்ப செயலுக்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க பதிலடி அளிப்பார்கள். இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x