Published : 11 Nov 2025 10:55 AM
Last Updated : 11 Nov 2025 10:55 AM
கல்பாக்கம்: டெல்லியில் கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 9 பேர் நேற்று உயிரிழந்த நிலையில், கல்பாக்கத்தில் அமைந்துள்ள அணுமின் நிலையங்கள் நான்கு அடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு, மத்திய அரசின் ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைகளுக்கு பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் பகுதியில் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் மற்றும் சென்னை அணுமின் நிலையம் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் அணுமின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், டெல்லியில் கார் குண்டு வெடித்து நேற்று 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், 25க்கும் மேற்பட்ட நபர்கள் படுகாயமடைந்தனர். இதையடுத்து, கல்பாக்கத்தில் உள்ள அணுமின் நிலையங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் மற்றும் நகரியப் பகுதிகளில் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், அணுமின் நிலையங்களுக்கு செல்லும் நுழைவு வாயில் பகுதியில் தமிழக போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதில், அணுமின் நிலையங்களுக்கு சுழற்சி முறையில் பணிக்குச் செல்லும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள், வாகனங்கள் அனைத்தும் சிஐஎஸ்எப் படையினரின் சோதனைகளுக்கு பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றன.
அணுமின் நிலையங்கள் நான்கு அடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக சிஐஎஸ்எப் மற்றும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT