Published : 11 Nov 2025 06:23 AM
Last Updated : 11 Nov 2025 06:23 AM
சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கோயில்கள் சார்பில், 70 வயது பூர்த்தியடைந்த மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் திட்டத்தின் தொடக்க விழா திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலில் நேற்று நடந்தது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று திட்டத்தை தொடங்கி வைத்து, 200 மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்தார்.
தொடர்ந்து பார்த்தசாரதி சுவாமி கோயில் சார்பில் திருவல்லிக்கேணி நல்லத்தம்பி தெருவில் ரூ.2.06 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணை ஆணையர், செயல் அலுவலர் மற்றும் கண்காணிப்பாளர் குடியிருப்புகளையும், பார்த்தசாரதி தெருவில் ரூ.1.35 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பணியாளர் குடியிருப்பினையும் திறந்து வைத்து வீடு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார்.
அப்போது, உதயநிதி பேசியதாவது: சென்னை மண்டலத்தில் 200 மூத்த தம்பதிகளுக்கும், இதர மண்டலங்களிலிருந்து 631 மூத்த தம்பதிகள் என மொத்தம் 831 மூத்த தம்பதியருக்கு இன்று சிறப்பு செய்யப்பட்டுள்ளது. அந்த தம்பதிகளுக்கு ரூ.2,500 மதிப்பிலான புத்தாடைகள், பழங்கள், மங்கலப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
பொதுவாக, மகனுடைய திருமணத்தையும், பேரனுடைய திருமணத்தையும் வீட்டில் இருக்கக்கூடிய அப்பா, அம்மாவும், தாத்தா பாட்டியும்தான் முன்னிலை வகித்து, தலைமையேற்று நடத்தி வைப்பார்கள். ஆனால், இந்த பேரனான எனக்கு தாத்தா, பாட்டியினுடைய திருமணத்தை நடத்தி வைக்கின்ற வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மேயர் ஆர்.பிரியா, குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார், பெரும்புதூர் ஜீயர் ராமானுஜ எம்பார் சுவாமிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சுற்றுலாத்துறை செயலர் மணிவாசன், அறநிலையத்துறை ஆணையர் பி.என்.தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விஜய் குறித்து மறைமுக விமர்சனம்: ‘திமுக - 75 அறிவுத் திருவிழா’ என்ற பெயரிலான மாநாட்டு நிறைவு விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “திமுகவை அழிக்க வேண்டும் என பலர் நினைக்கின்றனர். புதிதாக பலர் கிளம்பி வரிசையாக வருகின்றனர். பாசிச சக்திகள் நம் கொள்கைமீது கைவைத்துப் பார்க்க முயற்சிக்கின்றன. அதை தடுக்க வேண்டும். திமுகவுக்கு கொள்கைதான் அடித்தளம். ஆனால், இன்று சிலர் (தவெக தலைவர் விஜய்) அடித்தளமே இல்லாமல் அரசியலுக்கு வர முயற்சிக்கின்றனர்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT