Published : 11 Nov 2025 06:56 AM
Last Updated : 11 Nov 2025 06:56 AM
சென்னை எம்ஜிஆர் நகர் சாலையோர வியாபாரிகளுக்கான மத்திய அரசின் மக்கள் நல திட்ட விளக்க சிறப்பு முகாம் கே.கே.நகரில் நேற்று நடந்தது. இதில் பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (எஸ்ஐஆர்) நேர்மையாக நடைபெறுகிறது. இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். எஸ்ஐஆர் இடியாப்பச் சிக்கல் நிறைந்தது என்று முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார்.
எஸ்ஐஆர் இடியாப்பம் போல சிக்கலானது அல்ல. எஸ்ஐஆர் என்பது இட்லியைப் போன்றது. அப்படியே பிய்த்து சாப்பிடலாம். உடலுக்குச் சத்தான இட்லியைப் போல் எஸ்ஐஆர் ஜனநாயகத்துக்கு சத்தானது. அவசர நிலை பிரகடனத்தின் போது, மு.க.ஸ்டாலினை சிறைக்கு அனுப்பிய காங்கிரஸ் கட்சியை பார்த்து, ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் கட்சி என திமுகவினர் சொல்கிறார்கள். இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்ட போது, ராகுல்காந்தி எங்கே போனார் என்று தெரியவில்லை.
பாஜக மீது சேற்றை வாரி இறைப்பதை விட்டு விட்டு, வாக்காளர் திருத்தத்துக்கும், மக்களுக்கும் ஆதரவாக இருக்க வேண்டும். அதிமுகவின் ஓனர் பாஜக என்றால், திமுகவின் ஓனர் காங்கிரஸா? துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முதலில் பேச கற்றுக்கொள்ள வேண்டும். உதயநிதிக்கு எந்த அனுபவமும் இல்லை. அவர் துணை முதல்வராக எப்படி வந்தார். சமூக நீதியை பேசும் திமுக, திருமாவளவன், செல்வப்பெருந்தகை போன்றோர்களை துணை முதல்வராக்கியிருக்க வேண்டும்.
திமுக மக்களை பற்றி சிந்திக்காமல் எல்லோரையும் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது. இவர்களுக்கு பாஜக - அதிமுக கூட்டணியை பற்றி பேச எந்த தார்மீக உரிமையும் இல்லை. தமிழகத்தில் காவலர் குடியிருப்பில் ஒருவரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்திருக்கிறார்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எங்கே இருக்கிறது? முதலில், சட்ட ஒழுங்கு பிரச்சினையையும், மக்களையும் பாருங்கள். அதன் பிறகு எஸ்ஐஆர்-ஐ பார்க்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT