Published : 11 Nov 2025 06:30 AM
Last Updated : 11 Nov 2025 06:30 AM
கோவில்பட்டி: மேற்கு ஆப்ரிக்கா நாடான மாலியில் தமிழகத்தைச் சேர்ந்த 5 தொழிலாளர்கள் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனர். அவர்களை பத்திரமாக மீட்க இந்தியத் தூதரக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் ஜுன்டா ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள அல்-கய்தா மற்றும் ஐ.எஸ் ஆதரவு தீவிரவாத அமைப்புகள் ராணுவ அரசுடன் மோதலில் ஈடுபட்டுள்ளன. இதனால் அங்கு வன்முறை நிலவுகிறது.
இங்கு 100-க்கும் மேற்பட்ட எரிபொருள் வாகனங்களுக்கு தீவிரவாதிகள் சமீபத்தில் தீ வைத்தனர். கச்சா எண்ணெய் விநியோகத்துக்கும் தடை ஏற்பட்டதால் மாலி நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் அங்குள்ள பள்ளிகள் மூடப்பட்டன. மின்சார உபயோகத்துக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இதனால் ஆத்திரம் அடைந்த தீவிரவாதிகள், கோப்ரி என்ற இடம் அருகே மின் நிறுவனத்தில் பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த 5 பேரை கடத்திச் சென்றனர். இவர்களில் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே கொடியன்குளத்தைச் சேர்ந்த புதியவன் (52), நாரைக்கிணறு பொன்னுத்துரை (41), கலப்பைப்பட்டி பேச்சிமுத்து என்ற முத்துசாமி (41) ஆகிய மூவரும் கடத்தப்பட்டிருப்பது நேற்று தெரியவந்தது.
மற்ற இருவர் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த இசக்கிராஜா (36), புதுக்குடி ஊராட்சி கண்மணியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த தளபதி சுரேஷ் (26) என்று கூறப் படுகிறது நவம்பர் 6-ம் தேதியே இச்சம்பவம் நடைபெற்ற போதும், தற்போதுதான் அவர்களது குடும்பத்தினருக்கு தகவல் தெரியவந்துள்ளது.
அவர்களை உடனடியாக மீட்க பிரதமர் மோடியும், முதல்வர் மு.க.ஸ்டாலினும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என அவர்களது குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் தொழிலாளர்களை மீட்க மாலியில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இது தொடர்பாக மாலி அரசு அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட மின் நிறுவனத்துடன் இந்திய தூதரக அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். இதற்கிடையே, ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சி.சண்முகையா, கடத்தப்பட்ட தொழிலாளர்களின் குடும்பத்தினரை நேரில் பார்த்து ஆறுதல் தெரிவித்தார். தொழிலாளர்களை மீட்க மத்திய அரசின் உதவியுடன் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என உறுதி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT