Published : 10 Nov 2025 09:03 PM
Last Updated : 10 Nov 2025 09:03 PM
கோவை: ‘எஸ்ஐஆர் பணிகளில் திமுகவினரின் அத்துமீறல் அதிகரித்துள்ளது. இச்சம்பவங்கள் தொடர்ந்தால் தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் புகார் அளிக்கப்படும்’ என்று எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
கோவை வ.உ.சி மைதானத்தில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தலைமையில் இன்று பலர் ஒன்றிணைந்து வந்தே மாதரம் பாடலை பாடினர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன் கூறியது: “வந்தே மாதரம் பாடல் 150-வது நிறைவையொட்டி பிரதமர் மோடி ஆண்டு முழுவதும் கொண்டாட அறிவுறுத்தியுள்ளார். இது கட்சி நிகழ்ச்சி அல்ல. நியாயமாக பார்த்தால் விடுதலைப் போராட்ட இயக்கத்தில் பங்கு பெற்ற முக்கியமான அரசியல் கட்சியினர் அனைவரும் இதை முன்னெடுத்து செல்ல வேண்டும். சுதந்திர போராட்டத்தில் அதிகமான பங்களிப்பு வழங்கியது நம்முடைய தமிழகம்.
ஆனால் ”வந்தே மாதரம்” பாடலின் 150-வது ஆண்டு விழாவை மாநில அரசு கொண்டாட மறந்துவிட்டது. கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்படும் வஉசி கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, அவருக்கு செக்கு இழுக்கும் தண்டனை விதிக்கப்பட்டது. அந்த செக்கு இன்றும் கோவை சிறையில் பாதுகாக்கப்படுகிறது. அந்த இடத்தில் நின்று மாணவ, மாணவிகளுடன் இணைந்து வந்தே மாதரம் பாடலை பாட மக்கள் பிரதிநிதியாக அனுமதி கேட்டபோதும் மூன்று நாட்கள் வரை எவ்வித முடிவும் எடுக்காமல் நிர்வாக காரணங்களால் அனுமதி மறுக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
150 மாணவ, மாணவிகள் ”வந்தே மாதரம்” பாடலை பாட என்ன பாதுகாப்பு பிரச்சினை இருக்க முடியும். திமுக அரசு தேசபக்தியை வளர்க்கும் பணியை யார் மேற்கொண்டாலும் அவர்களுக்கு தடை விதிக்கிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) பணிகள் தொடங்கியுள்ள நிலையில், திமுக அரசுக்கு அவர்களுடைய திறமையின்மை மற்றும் ஊழலை மறைப்பதற்கு ஏதாவது ஒன்று மத்திய அரசின் மீது திசை திருப்ப நடவடிக்கை மேற்கொள்வார்கள்.
‘எஸ்ஐஆர்’ பணி புதிதாக நாட்டில் செயல்படுத்தப்படுவது அல்ல. ஏற்கெனவே தமிழகத்தில் நடத்தப்பட்டுள்ளது. அப்போது எல்லாம் அது குறித்து பேசாத திமுக தற்போது மட்டு ஏன் எதிர்க்கிறது. பிஹாரில் ஒரு புகார் கூட பெறப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அரசு ஊழியர்களை கொண்டு பணியை மேற்கொள்ள வேண்டிய நிலையில், அதிகாரிகளை மிரட்டி விண்ணப்பங்களை பெற்று திமுக கட்சியினரின் உதவியுடன் விநியோகம் செய்து வருகின்றனர்.
திமுவினர் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளன. இந்நடவடிக்கை தொடர்ந்தால் தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் புகார் அளிக்கப்படும். புதிய கட்சிகள் கண்காட்சியில் வைக்கப்படும் அட்டை தாஜ்மஹால் போன்றவை. தட்டினால் விழுந்து விடும் என துணை முதல்வர் உதயநிதி கூறியுள்ள நிலையில், திருப்பி தட்டினால் எத்தகைய தாக்கும் ஏற்படும் என அவருக்கு தெரியாது.
திமுக மாற்றப்படும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. நடிகர் விஜய், திமுக-வை வீழ்த்தப் போவதாக கூறுகிறார். எப்படி தனியாக வீழ்த்த முடியும். சிறப்பு திட்டம் ஏதேனும் உள்ளதா என தெரியவில்லை. கோவையில் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளன. அரசு மருத்துவமனையில் மருந்து போதுமான அளவு இல்லை. மக்கள் பிரச்சினைகளை தீர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
தொடர்ந்து மாலை கோவை புலியகுளம் மாநகராட்சி பள்ளியில் தேசிய அனல் மின் நிறுவனம் மற்றும் மக்கள் சேவை மையம் தன்னார்வ அமைப்பு சார்பில் கோவை மாநகர பகுதியில் 11 நவீன அங்கன்வாடி மையங்கள் அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது. இதில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அம்மன் கே அர்சுனன், தேசிய அனல் மின் நிறுவனத்தின் முன்னாள் சுயாதீன இயக்குநர் சங்கீதா வாரியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT