Published : 10 Nov 2025 07:03 PM
Last Updated : 10 Nov 2025 07:03 PM
குமுளி: முல்லைப் பெரியாறு அணையை மத்திய கண்காணிப்பு குழுவினர் இன்று ஆய்வு செய்தனர். இதில் அணை பலமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்த தேசிய அளவிலான நிபுணர் குழுவை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து மத்திய நீர்வளத் துறை - தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் 7 பேர் கொண்ட குழு மற்றும் துணைக்குழு அமைக்கப்பட்டது.
இக்குழுக்கள் தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை காலங்களில் அணையை ஆய்வு செய்து பராமரிப்பு, பாதுகாப்பு குறித்த அறிக்கையை ஆணையத்துக்கு தாக்கல் செய்யும். கடந்த மார்ச் 22-ம் தேதி மத்திய கண்காணிப்பு குழு அணையை ஆய்வு செய்தது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் இக்குழுவினர் இன்று (நவ.10) அணையில் ஆய்வுப் பணியை மேற்கொண்டனர்.
முன்னதாக, தேக்கடி வந்த குழு தலைவர் அனில் ஜெயின் தலைமையிலான குழுவினர் படகு துறையில் இருந்து தமிழக நீர்வளத் துறையினரின் படகில் அணைக்குச் சென்றனர். அங்கு அவர்கள் அணைக்கான நீர்வரத்து, மெயின் அணை, பேபி அணை, கேலரி உள்ளிட்ட பகுதிகளையும், நிலநடுக்க மற்றும் நில அதிர்வுகளை பதிவு செய்யும் கருவிகளையும் ஆய்வு செய்தனர்.

பின்னர் 4-வது மதகை இயக்கி சரிபார்த்தனர். தொடர்ந்து அணையின் நீர்கசிவு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அணையின் நீர்மட்டத்துக்கு ஏற்ப இந்த நீர்கசிவு இருக்கும். தற்போது நீர்மட்டம் 134.80 அடி உள்ள நிலையில் நீர்க்கசிவு நிமிடத்துக்கு 93.6 லிட்டராக இருந்தது. இது சரியான அளவில் இருந்ததால் அணை பலமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உடன் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய (பேரிடர் மற்றும் மீள்தன்மை) உறுப்பினர் ராகேஷ் டோடேஜா, இந்திய அறிவியல் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஆனந்த ராமசாமி, தமிழ்நாடு நீர்வளத் துறை செயலாளர் ஜே.ஜெயகாந்தன், காவிரி தொழில்நுட்ப குழும, தொழில் நுட்ப நிபுணர் சுப்ரமணியன் மற்றும் கேரள நீர்வளத்துறை அதிகாரிகள் இருந்தனர்.
பொதுவாக ஆய்வு முடிந்ததும், மாலையில் குமுளி ஒன்னாம் மைல் எனும் இடத்தில் உள்ள நீர்வளத்துறை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். ஆனால் இம்முறை மதுரையில் உள்ள தனியார் ஹோட்டலில் கூட்டம் நடைபெற உள்ளதாக குழுவினர் கூறிச் சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT