Published : 10 Nov 2025 06:12 AM
Last Updated : 10 Nov 2025 06:12 AM
சென்னை: தமிழகத்தில் பதிவு உரிமம் பெறாத மருத்துவமனைகள், கிளீனிக்குகள், ஆய்வகங்கள் மீது நடவடிக்கை எடுக்க மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள், கிளீனிக்குகள், சிறிய அளவிலான மருத்துவ மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
மருத்துவமனைகள், கிளீனிக்குகள் பதிவு உரிமம்பெறுவது அவசியம் ஆகும். அதேபோல், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டும். இதற்காக 2018-ம் ஆண்டு தமிழக மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்துதல் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதில் அரசு, தனியார் மருத்துவமனைகள் மட்டுமின்றி, சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி மருத்துவமனைகளும் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் அவ்வப்போது வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், அந்த காலகட்டத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மருத்துவமனைகள் மட்டுமே விண்ணப்பங்களை சமர்ப்பித்தன. இதையடுத்து பதிவு உரிமம் கோரி விண்ணப்பிக்காத மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் (டிஎம்எஸ்) ஆலோசித்து வருகிறது.
விண்ணப்பிக்காத மருத்துவமனைகளுக்கு முதல்கட்டமாக நோட்டீஸ் அனுப்பபபடும். அதனையும் பொருட்படுத்தாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT