Published : 10 Nov 2025 07:52 AM
Last Updated : 10 Nov 2025 07:52 AM
சென்னை: இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 70 வயது பூர்த்தியடைந்த மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் திட்டத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது: கடந்த 2025-26-ம் நிதியாண்டுக்கான சட்டப்பேரவை அறிவிப்பில், ``இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் மணிவிழா கண்ட 70 வயது பூர்த்தியடைந்த ஆன்மிக ஈடுபாடு உள்ள 100 தம்பதிகள் வீதம் 20 இணை ஆணையர் மண்டலங்களில் 2 ஆயிரம் தம்பதிகளுக்கு கோயில்கள் சார்பில் சிறப்பு செய்யப்படும்'' என அறிவிக்கப்பட்டது.
ரூ.2500 மதிப்பு பொருட்கள்: இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலில் சென்னை இணை ஆணையர் மண்டலங்களைச் சேர்ந்த 70 வயது பூர்த்தியடைந்த 200 மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்து, திட்டத்தை தொடங்கி வைக்கிறார். தமிழகம் முழுவதும் இத்திட்டத்தின் கீழ், 2 ஆயிரம் மூத்த தம்பதியினர் சிறப்பு செய்யப்படுகின்றனர். இத்தம்பதியினருக்கு ரூ.2,500 மதிப்பிலான வேட்டி மற்றும் சட்டை, புடவை, பழ வகைகள், மஞ்சள், குங்குமம், கண்ணாடி வளையல் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் மற்றும் சுவாமி படம் ஆகியவை வழங்கப்படுகின்றன.
குடியிருப்புகள் திறப்பு: அதனைத் தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பார்த்தசாரதி சுவாமி கோயில் சார்பில் திருவல்லிக்கேணி, நல்லதம்பி தெருவில் ரூ.2.05 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள துணை ஆணையர், செயல் அலுவலர் மற்றும் கண்காணிப்பாளர் குடியிருப்புகளையும், பார்த்தசாரதி தெருவில் ரூ.1.35 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பணியாளர் குடியிருப்பையும் திறந்து வைக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT