Published : 10 Nov 2025 08:17 AM
Last Updated : 10 Nov 2025 08:17 AM
சேலம் மாவட்டத்தில் மேட்டூர் தொகுதியில் திமுக, அதிமுக, பாமக கட்சிகள் சம பலத்தில் உள்ளன. இதனால், இந்தத் தொகுதி முக்கியமாக பார்க்கப்படுகிறது.
சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை மேட்டூர் தொகுதியில் தான் தேமுதிக, நாதக, பாமக, பாஜக கட்சிகள் முதல் கூட்டத்தை நடத்தியுள்ளன. அந்த வகையில், மேட்டூரில் பாஜக சார்பில் ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுகவினர் கலந்து கொள்வதற்காக சேலம் பாஜக மேற்கு மாவட்ட தலைவர் ஹரிராமன், அதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவனை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். பின்னர், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி இசைவு கொடுத்ததையடுத்து, அதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் நிர்வாகிகள், தொண்டர்களுடன் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்த கூட்டம் நடைபெறும் நேரத்துக்கு முன்பாகவே மேட்டூர் வந்து காத்திருந்த அதிமுக மாவட்ட செயலாளர் இளங்கோவன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை வரவேற்று ஒன்றாக இருவரும் மேடை ஏறி அமர்ந்து, கருத்துகளை பரிமாறி சிரித்து மகிழ்ந்தனர். கூட்டத்துக்கு 2,000 நாற்காலிகள் போடப்பட்டதில், அனைத்து இருக்கைகளும் நிரம்பிய நிலையில், கிட்டத்தட்ட சமபங்கு இருக்கைகளில் அதிமுகவினர் அக்கட்சி கொடியுடன் அமர்ந்திருந்தது இரு கட்சிகளின் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
கூட்டத்துக்கு முன்பு, எம்.ஜி.ஆர். திரைப்பட பாடல்களின் இசை நிகழ்ச்சியும், திமுகவை எதிர்த்து ஜெயலலிதா பேசிய வீடியோவும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. தொடர்ந்து, சேலம் மாவட்டத்தில் திமுக கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது குறித்தும், மக்களின் குற்றச்சாட்டு குறித்தும் 2 வீடியோக்கள் எல்இடி திரையில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டன.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசும் போது, ‘அதிமுக மாவட்ட செயலாளர் இளங்கோவன் வரும் தேர்தலில் அடுத்த இடத்திற்கு முன்னேறிச் செல்வார்’ என்று பேசி அவரையும், கட்சியினரையும் குஷிப்படுத்தினார்.
குறிப்பாக, பாஜக நடத்திய கூட்டம் ஒரு பக்கம் அதிமுக நடத்திய கூட்டம் மாதிரியும், மறு பக்கம் பாஜகவின் வளர்ச்சிக் கூட்டம் மாதிரியும் அமைந்தது. இந்த கூட்டத்துக்கு அதிமுக கொடுத்த ஆதரவினால், பாஜக மாநில தலைவரும், அக்கட்சியினரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இதனால் அதிமுக கூட்டணியில் சேலம் மாவட்டத்தில் ஒரு தொகுதி கேட்டு வாங்க காய் நகர்த்தவும் பாஜக முடிவு செய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT