Published : 10 Nov 2025 12:37 AM
Last Updated : 10 Nov 2025 12:37 AM
சென்னை: புதுக்கோட்டை, திருச்சியில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின், மூத்த குடிமக்களின் வாழ்வை மேம்படுத்தும் ‘அன்புச்சோலை’ திட்டத்தை இன்று தொடங்குகிறார்.
புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் இன்று காலை 11 மணி அளவில் நடைபெறும் அரசுநலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார். இதில் ரூ.767 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைக்கிறார். பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில், மூத்த குடிமக்களின் வாழ்வை மேம்படுத்த, வீடுகளில் உள்ள முதியவர்கள் மனம் சோர்வடையாமல் ஊக்கம் பெற உதவும் வகையில் ‘அன்புச் சோலை’ என்ற புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளது. திருச்சியில் இன்று பகல் 12.30 மணி அளவில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் இந்த புதிய திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளன.
25 இடங்களில் ‘அன்புச்சோலை’ - இந்த திட்டத்தின்கீழ் தொடங்கப்படும் ‘அன்புச்சோலை - முதியோர் மனமகிழ் வள மையங்கள்’ திட்டம் மூத்த குடிமக்களின் ஆரோக்கியமான வளர்ச்சியில் கவனம் செலுத்தும் வகையில் சமூக மையங்களாக செயல்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, வேலூர், தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய 10 மாநகராட்சிகளில் தலா 2 மையங்கள், தொழில் துறைமாவட்டங்களான ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, சென்னைமாநகராட்சியில் தண்டையார்பேட்டை, சோழிங்கநல்லூர், விருகம்பாக்கம் என மொத்தம் 25 அன்புச்சோலை மையங்கள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படுகின்றன. இங்கு பொழுதுபோக்கு அம்சங்கள், யோகா, நூலகம் மற்றும் முதியோருக்குத் தேவையான திறன் மேம்பாடு சேவைகள் வழங்கப்பட உள்ளன.
தமிழக அரசின் நிதியுதவியுடன், மூத்த குடிமக்களின் நலனுக்கான பல்வேறு அம்சங்கள் கொண்ட அன்புச்சோலை மையங்கள் பகலில் மட்டும் செயல்படும். இந்த பராமரிப்பு மையங்களில், முதியோர் தோழமை மற்றும் அர்த்தமுள்ள செயல்பாடுகளில் ஈடுபடலாம். இந்த அன்புச்சோலை மையத்துக்கு முதியோர் சென்றுவர ஏதுவாக, போக்குவரத்து வசதியுள்ள இடங்களில் இந்த மையங்கள் அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT