Published : 09 Nov 2025 10:26 PM
Last Updated : 09 Nov 2025 10:26 PM
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தடை செய்யக் கோரி, தமிழக வாழ்வுரிமை கட்சியின் மகளிர் அணியினர் பூந்தமல்லியில் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழர் பண்பாடு மற்றும் குடும்ப அமைப்பைச் சீர்குலைக்கும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியைத் தடை செய்யக் கோரி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மகளிர் அணி சார்பில், பூந்தமல்லி குந்தம்பாக்கம் பிக் பாஸ் படப்பிடிப்பு தளம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாநில மகளிர் அணி தலைவி முத்துலட்சுமி வீரப்பன், மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் இலக்கியா, மகளிர் அணி செயலாளர்கள் அமராவதி, மதுபாலா, துணை செயலாளர்கள் கார்குழலி, சந்திரா உள்பட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், முத்துலட்சுமி வீரப்பன் பேசுகையில், "தமிழ் கலாசாரத்தை அழித்து, ஒழித்து இந்நிகழ்ச்சி நடத்துபவர்கள் வாழ நினைக்கிறார்கள். இதுபோல அநாகரீகமான, ஆபாசமான நிகழ்ச்சியை எதிர்த்து போராட பொதுமக்கள் ஆதரவு கொடுக்கவேண்டும். தமிழ் பண்பாடு, கலாச்சாரம் சீரழியும் சூழலை தடுத்து நிறுத்த, தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். தொடர்ந்து, ஆபாசத்தை விளைவிக்கும் பிக்பாஸை தமிழக அரசு தடைசெய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில், கட்சித் தலைவர் வேல்முருகன் பேசியதாவது: “தமிழ் சமூகம் தலைகுனியும், முகம் சுளிக்கும் நிகழ்வாக விஜய்டிவியின் பிக்பாஸ் இடம்பெற்றுள்ளது. இதை விஜய்டிவி ஒழுங்கப்படுத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால், விஜய் டிவி என் கருத்தை உள் வாங்க வில்லை. எனவே, இங்கு மகளிர் அணி பொறுப்பாளர்கள் ஜனநாயக எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். இங்கு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி பெற்று தந்த தமிழக முதல்வருக்கு நன்றி.
இங்கு காவலர்கள் இல்லை, பிக் பாஸ் அரங்குக்கு 500 காவலர்கள் போடப்பட்டுள்ளனர். ஆபாசத்தை கொண்டு செல்லும் பிக்பாஸ் அரங்குக்கு பாதுகாப்பு. உங்களுக்கு விரைவில் எங்கள் மொழியில் சரியான பாடத்தை தெரிவிப்போம். விஜய்சேதுபதி இந்த நிகழ்வை தொகுத்து வழங்குவதில் இருந்து தயவு செய்து வெளியேற வேண்டும்” இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT