Published : 09 Nov 2025 09:52 PM
Last Updated : 09 Nov 2025 09:52 PM

கரூர் கூட்ட நெரிசல்: சிபிஐயிடம் 2-வது நாளாக ஆவணங்களை ஒப்படைத்த தவெக நிர்வாகிகள்

கரூர்: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக கரூர் சுற்றுலா மாளிகையில் சிபிஐயிடம் 2-வது நாளாக தவெக வழக்கறிஞர், நிர்வாகிகள் ஆவணங்களை ஒப்படைத்தனர்.

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப். 27ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவ்வழக்கை விசாரித்து வரும் சிபிஐ இதுதொடர்பாக 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி அக். 30-ம் தேதி முதல் கரூர் சுற்றுலா மாளிகையில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

கரூரில் இருந்து நவ. 2-ம் தேதி இரவு சென்னை சென்ற சிபிஐ குழு நவ. 3ம் தேதி சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் பிரச்சார வாகனத்தின் சிசிடிவி கேமரா பதிவுகள், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் விபரங்களை உள்ளிட்ட விபரங்களை கேட்டு சம்மன் வழங்கினர். இந்த விபரங்கள் 3 நாட்களில் அளிக்கப்படும் என தவெக நிர்வாகி நிர்மல்குமார் தெரிவித்திருந்தார்.

தவெக பிரச்சார கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உள்ளூர், வெளி மாவட்ட போலீஸாரிடம் நவ. 4, 5 ஆகிய இரு நாட்கள், ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் என 25 பேர் சிபிஐ விசாரணைக்கு நவ. 6,7, 8ம் தேதிகளில் ஆஜராகியிருந்தனர்.

கரூர் சுற்றுலா மாளிகைக்கு தவெக வழக்கறிஞர் அரசு, தவெக சென்னை பனையூர் அலுவலக உதவியார் குருசரண், அவருடன் வந்த மற்றொருவர் என 3 பேர் பிரச்சார வாகனத்தின் சிசிடிவி காமரா பதிவு கள் அடங்கிய வீடியோக்கள், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் விபரங்கள் அடங்கிய ஆவணங்களை நேற்று ஒப்படைத்தனர். மேலும் அதுகுறித்து ஒன்றரை மணி நேரம் சிபிஐயிடம் விளக்கம் அளித்தனர்.

இந்நிலையில் இன்று (நவ. 9ம் தேதி) ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் 3 பேரிடம் விசாரணை நடைபெற்றது. தவெக வழக்கறிஞர் அரசு, சென்னை பனையூர் அலுவலக உதவியாளர் குருசரண், அவருடன் வந்த மற்றொருவர் என 3 பேரும் இன்றும் ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைத்தனர். மேலும் அவர்கள் சமர்பித்த வீடியோ மற்றும் ஆவணங்கள் குறித்து விளக்கம் அளித்துள்ளனர்.

காலை 11.15 மணிக்கு உள்ளே சென்றவர்கள் மதியம் உணவுக்காக வெளியே சென்றுவிட்டு மீண்டும் கரூர் சுற்றுலா மாளிகையில சிபிஐ முன் ஆஜராகி ஆவணங்கள் குறித்து விளக்கி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x