Published : 09 Nov 2025 07:18 AM
Last Updated : 09 Nov 2025 07:18 AM
சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு நேற்று வந்த பாஜக தேசியக்குழு உறுப்பினரும், நடிகருமான சரத்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எஸ்ஐஆர் என்பது வாக்காளர்களை சரிபார்க்கும் வேலை. கள்ள ஓட்டுவது போடுவது தடுக்கப்படும் என்பதால் குறை கூறுகின்றனர். எந்த சீர்திருத்தமாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும். வாக்காளரை சரிபார்க்க ஒவ்வொரு வீட்டுக்கும் மூன்று முறை வருவதாக கூறியுள்ளனர். உண்மையான வாக்காளராக இருந்தால், அந்த வீட்டுக்கு வரும்போது தகுந்த ஆவணங்களை காண்பித்து சீர்திருத்தம் செய்வதுதானே நல்லது.
தேர்தலுக்கு முன்புதானே வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்படும். 2026 தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. எஸ்ஐஆர் ஒரு மாதத்தில் முடிந்துவிடும். கருத்து வேறுபாடு இருந்தால் சொல்லுங்கள் என்றுள்ளனர். திமுகவுக்கு சாதகமாக இருக்காது என்பதால் எஸ்ஐஆர் சரிபார்ப்பது தவறு என குறை சொல்லக்கூடாது.
2026 தேர்தலில் தவெகவுக்கும் திமுகவுக்கும்தான் போட்டி எனக் கூறியதை விஜய்யிடம்தான் கேட்க வேண்டும். அதிமுகவை பிடிக்காததால் டிடிவி.தினகரனும் விஜய்க்கு ஆதரவாக பேசியுள்ளார். ஒரு கட்சியை ஆரம்பித்து நடத்தி வருபவர், நேற்று ஆரம்பித்த கட்சியைப் பற்றிக்கூறுவது டிடிவி.தினகரனுக்கு நல்லதல்ல. 2026 தேர்தலில் என்ன நடக்கும் என யாருக்கும் தெரியாது, நாளை நடப்பது உங்களுக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது என்பதால் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். பாஜக தேசியக்குழுவில் உறுப்பினராக உள்ளேன். தமிழக தேர்தல் பொறுப்பாளராகவும் நியமித்துள்ளனர். மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனோடு இணைந்து தேர்தல் கூட்டணி வெற்றிக்கு உறுதுணையாக செயல்படுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT