Published : 09 Nov 2025 12:29 AM
Last Updated : 09 Nov 2025 12:29 AM
நாமக்கல்: அரசு திறக்கவுள்ள குவாரிகளில் மணலுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இந்த சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற மாநிலத் தலைவர் கே.ராஜசேகர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் சுமார் 75 ஆயிரம் மணல் லாரிகள் இயங்கின. கடந்த 2 ஆண்டுகளாக அரசு மணல் குவாரிகள் மூடப்பட்டதால், லாரி உரிமையாளர்கள் பலர் வாங்கிய கடனை செலுத்த முடியாமல் லாரிகளை விற்பனை செய்துவிட்டனர். தற்போது 50 ஆயிரம் மணல் லாரிகள் மட்டுமே உள்ளன.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் நன்செய் இடையாறு உட்பட தமிழகத்தில் 8 இடங்களில் மணல் குவாரிகள் தொடங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
குவாரிகள் திறக்கும் முன்னர் மணல் லாரி உரிமையாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, மணலுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்து மக்களுக்கு நேரடியாக வழங்க வேண்டும். ஏற்கெனவே குறைந்த விலையில் எம்.சாண்டை பொதுமக்கள் பயன்படுத்தி வருவதால், மணலுக்கு அதிக விலை இருந்தால் வாங்க முன்வரமாட்டார்கள். மேலும், குத்தகைதாரர்கள் மூலம் 2-வது விற்பனையாக மணல் வழங்கினால், பல்வேறு முறைகேடுகளும், விலையும் அதிகரிக்கும்.
எனவே, ஆன்லைன் மூலம் பதிவு செய்து நேரடியாக மணல் விற்பனை செய்ய வேண்டும். அரசியல்வாதிகளுக்கு முன்னுரிமை கொடுக்காமல், பதிவுப் பட்டியல்படி மணல் வழங்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பொருளாளர் பரமசிவம், இணைச் செயலாளர் சிவக்குமார் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT