Published : 08 Nov 2025 01:55 PM
Last Updated : 08 Nov 2025 01:55 PM

தாந்தோணிமலை கோயில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க நடவடிக்கை: திருத்தொண்டர் அறக்கட்டளை அறங்காவலர் தகவல்

கரூர்: தாந்தோணிமலை கோயில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக திருத்தொண்டர் அறக்கட்டளை அறங்காவலர் ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கரூர் தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலுக்கு சொந்தமான 600 ஏக்கர் நிலம் தாந்தோணிமலை மற்றும் ஏமூர் பகுதிகளில் உள்ளது. கோயிலுக்கு சொந்தமான சுமார் 12 ஏக்கர் இனாம் நிலம் ஏமூர் பகுதியில் மனைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

இன்று (நவ. 8ம் தேதி) திருத்தொண்டர் அறக்கட்டளை அறங்காவலர் ஆர்.ராதாகிருஷ்ணன் ஏமூரில் மனைகளாக பிரிக்கப்பட்ட நிலங்களை பார்வையிட்டு செய்தியாளர்களிடம் கூறியது: திருத்தொண்டர் அறக்கட்டளை மற்றும் அனைத்து சிவனடியார்கள் கூட்டமைப்பு சார்பில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் கோயில் நிலங்களை மீட்கவும், அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கவும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.

நிலமோ, மனையோ வாங்கும்போது 120 ஆண்டுகளுக்கு முந்தைய ஆவணங்களை சரிபார்ப்பது அவசியம் என வலியுறுத்தி ரியல் எஸ்டேட் மாபியா வலைகளில் சிக்கவேண்டாம் என வலியுறுத்தி வருகிறோம். 2012-ம் ஆண்டு முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோயில் நிலங்கள் மீட்புக்குறித்து 4 ஆய்வுக் கூட்டங்களை நடத்தியுள்ளோம்.

திருக்கோயில் சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் ரியல் எஸ்டேட் மாபியா, பொருளாதார வலிமை, சதி, சூழ்ச்சி ஆகியவற்றிற்கு அரசு அடிமையாகி விடுகிறது. இதனால் அப்பாவி பொதுமக்கள் அநியாயமாக பாதிக்கப்படுகின்றனர். தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலுக்கு பூஜை உள்ளிட்ட பணிகளுக்காக 600 ஏக்கர் நிலங்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலங்களை அதிகாரிகள் தனியாருக்கு பட்டா வழங்கியுள்ளனர். இவற்றை மீட்டு மீண்டும் கோயில் வசம் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் இதுவரை 5 சதவீத கோயில் நிலங்களே மீட்கப்பட்டுள்ளன. பத்திரப்பதிவு என்பது வரி செலுத்துவதற்கான ஒரு ஆவணம் மட்டுமே. தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலுக்கு சொந் தமான 600 ஏக்கர் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

இந்து சமய அறநிலையத்துறை வட்டாட்சியர் ராஜசேகர், தாந்தோணிமலை கோயில் பணியாளர்கள், அனைத்து சிவனடியார் கூட்டமைப்பு செயலாளர் சரவணன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x