Last Updated : 08 Nov, 2025 08:43 AM

 

Published : 08 Nov 2025 08:43 AM
Last Updated : 08 Nov 2025 08:43 AM

விடுதலை நாள் விழாவை புறக்கணித்த அமைச்சர்! - புகையும் புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி

புதுச்சேரி அரசியலில் பாஜக அமைச்சர் ஜான்குமார் முதல்வர் ரங்கசாமி தரப்பை ஆத்திரப்படுத்தும் விதமாக தனது அரசியல் நடவடிக்கைகளை கட்டமைத்து வருகிறார். இந்த நிலையில், புதுச்சேரி விடுதலை நாள் விழாவில் ஏனாம் பிராந்தியத்தில் அரசு சார்பில் கொடியேற்றி வைக்கப் பணிக்கப்பட்ட ஜான்குமார், அதை உதாசீனம் செய்திருப்பது ஆளும் கட்சி வட்டாரத்தை மட்டுமல்லாது எதிர்க்கட்சிகளையும் சீற வைத்திருக்கிறது.

புதுச்சேரியை ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசில் பாஜக-வுக்கு 2 அமைச்சர்கள் இருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் ஜான்குமார். அமைச்சர் பதவிக்காக பல்வேறு உத்திகளைக் கையாண்ட ஜான்குமார் அண்மையில் தான் அந்த இலக்கை அடைந்தார். இருந்த போதும் அவரை 110 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் இலாகா இல்லாத அமைச்சராகவே வலம் வர வைத்திருக்கிறார் ரங்கசாமி. முன்பு, அமைச்சர் பதவி கேட்டு போராட்டம் நடத்திய ஜான்குமார் இப்போது, தனக்கான இலாகாவை ஒதுக்கீடு செய்யக் கோரியும் சாம பேத தான தண்டங்களை எடுத்து வருகிறார். ஆனாலும், எத்தனையோ மாமலைகளைப் பார்த்துவிட்ட ரங்கசாமி, எதற்கும் அசைந்து கொடுக்காமல் இருக்கிறார்.

இந்த நிலையில் தான், நவம்பர் 1-ம் தேதி புதுச்சேரி மாநில விடுதலை நாளை முன்னிட்டு, மாநிலத்தின் ஒரு பகுதியான ஏனாமில் கொடியேற்றி வைப்பதற்காக அமைச்சர் ஜான்குமாரை பணித்தது அரசு. இதற்காக அழைப்பிதழ் எல்லாம் தயாராகி தரப்பட்டுவிட்ட நிலையில், கொடியேற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் புறக்கணித்து விட்டார் ஜான்குமார். இதுகுறித்து அவர் தரப்பில் விசாரித்த போது, அமைச்சர் வெளிநாட்டில் இருப்பதாக தகவல் சொன்னார்கள்.

இந்தத் தகவலைக் கேட்டு அப்செட்டான முதல்வர் ரங்கசாமி, “இது என்ன மாதிரியான செயல்?” என்று நொந்து கொண்டதாகச் சொல்கிறார்கள். அவர் மட்டுமல்லாது ஜான்குமாரை அமைச்சராக்கிய பாஜக தரப்பிலும் இந்த விஷயத்தில் ஜானுக்கு எதிராக கடுகு வெடித்ததாகத் தெரிகிறது.
இதுபற்றி பாஜக உயர்மட்ட நிர்வாகிகள் தரப்பில் பேசியபோது, "ஜான்குமாருக்கு இலாகா ஒதுக்குவது குறித்து முதல்வரிடம் பேசி இருக்கிறோம். அவரும் அதற்கு ரெடியாகவே இருந்தார்.

ஆனால், ஜான்குமாருக்கு நெருக்கமான லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகனான ஜோஸ் சார்லஸ், தொடர்ந்து அரசை விமர்சித்து வருவது முதல்வருக்குப் பிடிக்கவில்லை. முன்பு லாட்டரி தொழிலில் இருந்த ஜான்குமார்,இப்போது பழைய பாசத்தில் மார்ட்டின் தரப்புடன் நெருக்கமாக இருக்கிறார். ஜான்குமாரின் இரண்டு மகன்களும் ஜோஸ் சார்லஸுக்கு எல்லாமுமாக இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் சேர்ந்து தனி அணியை உருவாக்கப் போவதாகவும் ஒரு செய்தி இருக்கிறது.

இப்படி எல்லாம் திட்டம் இருப்பதால் தானோ என்னவோ, கட்சி அலுவலகத்தில் நடக்கும் கூட்டங்களுக்குக்கூட இப்போது ஜான்குமார் தரப்பினர் அவ்வளவாய் வருவதில்லை. இது பற்றி மேலிடத்துக்கும் தெரிவித்துள்ளோம். அவர்களும் ஜான்குமார் நடவடிக்கைகள் குறித்து விசாரித்துள்ளனர். என்.ஆர்.காங்கிரஸ் உடனான கூட்டணி தொடர வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கும் பாஜக தலைமை, இந்த விஷயத்தில் பிஹார் தேர்தலுக்குப் பிறகு நல்ல முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம்” என்றனர்.

என்.ஆர்.காங்கிரஸ் தரப்பிலோ, "விடுதலை நாள் விழாவுக்காக, தேசியக் கொடியேற்ற ஜான்குமார் ஏனாம் செல்லாதது முதல்வர் உள்ளிட்ட அனைவருக்குமே வருத்தம் தான். அவர் இப்போது பாஜக-வில் தான் இருக்கிறாரா என்றே சந்தேகமாக இருக்கிறது. அவரது அலுவலகத்தில் ஜோஸ் சார்லஸ் படம்தான் பெரிதாக மாட்டப் பட்டுள்ளது. இதுபற்றி பாஜக மாநிலத் தலைவர் வி.பி.ராமலிங்கத்தைக் கேட்டால், ‘இதுபற்றி மேலிடத்தில் தெரிவித்து விட்டேன்’ என்று சொல்லியே காலத்தை ஓட்டுகிறார்” என்கிறார்கள்.

காங்கிரஸ் தரப்பில் இந்த விவகாரத்தை கையில் எடுத்திருக்கும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, "அரசின் விடுதலை நாள் விழாவை புறக்கணித்து ஜான்குமார் வெளிநாடு சென்றது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதற்கு தார்மிகப் பொறுப்பேற்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என்றார். தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் இந்தத் தேர்தலில் ‘லாட்டரி குடும்பம்’ தான் முக்கிய பங்காற்றும் போலிருக்கிறது!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x