Published : 08 Nov 2025 01:04 AM
Last Updated : 08 Nov 2025 01:04 AM
சென்னை: எஸ்ஐஆர் ஆபத்து நிறைந்தது என தெரிந்திருந்தும் பாஜகவுடனான கூட்டணியால் அதிமுக அதை எதிர்க்க முடியாமல் இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் விமர்சித்துள்ளன.
ரஷ்ய நவம்பர் புரட்சி தின கொண்டாட்டத்தையொட்டி இந்தியகம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் 108-வது நவம்பர் புரட்சி தின கொடியேற்ற நிகழ்ச்சி சென்னையில் இருகட்சிகளின் மாநிலக் குழு அலுவலகங்களிலும் நேற்று நடைபெற்றது. பாலன் இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் கொடியேற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “எஸ்ஐஆர் தொடக்க நிலை யிலேயே தோற்றுவிட்டது. அதில்குளறுபடிகள் உள்ளன. இதில்அதிமுகவின் நிலைப்பாடும் ஆபத்தானதாகவும், பரிதாபமாகவும் உள்ளது. அதிமுகவின் குரல் ஆர்எஸ்எஸ், பாஜகவின் குரலாக மாறி வருகிறது” என்றார்.
இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாநிலக் கட்டுப்பாட்டுக்குழு தலைவர் கே.சுப்பராயன்,முன்னாள் மாநில செயலர் இரா.முத்தரசன் பங்கேற்றனர். இதேபோல் மார்க்சிஸ்ட் அலுவலகத்தில், அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் கொடியேற்றி வைத்து கூறும்போது, “எஸ்ஐஆர் விவகாரத்தில் ஆதரவு தெரிவிக்கும் அதிமுக, பாஜகவுக்கு ஒரு அடிமை போல் சிக்கிவிட்டது. தட்டிக்கேட்கும் நிலையில் அதிமுக இல்லை. எஸ்ஐஆர் ஆபத்து நிறைந்தது என தெரிந்தும் பாஜகவுடனான கூட்டணியால் அதிமுக அதை எதிர்க்க முடியாமல் இருக்கிறது. எனவே எஸ்ஐஆரை எதிர்த்து வரும் நவ.11-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT