Published : 08 Nov 2025 12:22 AM
Last Updated : 08 Nov 2025 12:22 AM
சென்னை: சட்டப்பேரவையில் கடந்த 4 ஆண்டுகளில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 211 மசோதாக்களில் 170 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், 27 மசோதாக்கள் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளதாகவும் ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் ஆர்.என்.ரவி தாமதப்படுத்துவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வரும் நிலையில், இதுபற்றி ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள விளக்கம்: சட்டப்பேரவையால் நிறைவேற்றப் பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர் தாமதம் செய்வதாகவும், அவரது நடவடிக்கைகள் தமிழக மக்களின் நலனுக்கு எதிரானவை என்றும் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகள்பொது வெளியில் வைக்கப்படுகின்றன.
கடந்த அக்.31 தேதி வரை பெறப்பட்டமொத்த மசோதாக்களின் விவரங்கள்படி, 81 சதவீத மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இவற்றில் 95 சதவீத மசோதாக்களுக்கு 3 மாதங்களுக்குள் ஒப்புதல் தரப்பட்டுள்ளது. கடந்த மாதம் கடைசி வாரத்தில் பெறப்பட்ட மசோதாக்கள் தற்போது ஆளுநரின் பரிசீலனையில் உள்ளன.
2021 செப்.18 முதல், 2025 அக்.31 வரை 211 மசோதாக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 170-க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ள 27 மசோதாக்களில் 16 மாநில அரசின் கோரிக்கை அடிப்படையில் அனுப்பப்பட்டுள்ளன. 4 மசோதாக்கள் உரிய தகவல்களுடன் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. இரு மசோதாக்களை அரசே திரும்ப பெற்றுள்ளது.
மேலும், சட்டப்பேரவைக்கு திருப்பிஅனுப்பப்பட்ட மசோதாக்கள், பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப் பட்டபோது அவற்றுக்கு ஒப்புதல் அளிக்
கப்பட்டுள்ளது. மேலும், 10 மசோதாக்கள் ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்டு, அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இவை சட்டப்பேரவையால் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டன. அவை நாடாளுமன்ற சட்டத்தின்கீழ் இயற்றப்பட்ட பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) விதி
களுக்கு முரணாக இருந்ததாலும், அவைமாநில சட்டப்பேரவையின் வரம்புக்கு அப்பாற்பட்டதாக கருதப்பட்டதாலும், ஆளுநர் அவற்றை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பினார்.
ஆளுநர், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தவும், தமிழக மக்களின் நலன்களை பாதுகாக்கவும் ஒவ்வொரு மசோதாவையும் உரிய கவனத்துடன் ஆய்வு செய்துள்ளார். இந்திய அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள கடமைகளைப் பின்பற்றி, மாநில மக்களின் நலன் காப்பதிலும் உண்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் ஆளுநர் செயல்பட்டுவருகிறார். அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு அனைத்துச் சட்டங்களும் அரசியலமைப்புக்கு உட்பட்டு நிறைவேற்றப்படுவதை உறுதி செய்து வருகிறார்.
ஆளுநர், தமிழக மக்கள் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டுள்ளார். தமிழர் பாரம்பரியம், கலை, இலக்கியத்தை முன்னிலைப்படுத்தும் ஆன்மிக, கலாச்சார, மொழிசார்ந்த முன்னெடுப்புகளுக்கு ஆதரவளித்து வருகிறார். ஆளுநர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு தமி
ழக மக்களின் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT