Published : 07 Nov 2025 05:12 PM
Last Updated : 07 Nov 2025 05:12 PM
தூத்துக்குடி: “ஜனநாயகத்தை கொலை செய்யும் முயற்சிதான் எஸ்ஐஆர்” என தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் கனிமொழி எம்.பி கூறியது: “எஸ்ஐஆர் (SIR) நடவடிக்கையை தேர்தலுக்கு முன்பே கொண்டு வந்து, இப்படி அவசர அவசரமாக அமுல்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது. இதனை உண்மையாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் என நினைத்திருந்தால், போதிய அவகாசம் கொடுத்து சரியாக அமல்படுத்தியிருக்க முடியும்.
ஆனால், பிஹாரிலும் நாம் தெளிவாகக் பார்த்தோம். பலரின் வாக்குரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற நிலை மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய மாநிலங்களிலும் நடந்துள்ளது. ஜனநாயகத்தை கொலை செய்யக் கூடிய ஒரு முயற்சிதான் இந்த எஸ்ஐஆர். தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி பல பிரச்சனைகளை உருவாக்கி, வாக்காளர்களின் உரிமைகளை பறிக்கக் கூடிய ஒரு சூழல் உருவாகி கொண்டிருக்கிறது. இதையெல்லாம் எதிர்த்துதான் திமுகவும், கூட்டணி கட்சிகளும் இணைந்து ஓர் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருக்கிறோம்.
ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், அவர்களுக்கு எதிரான குற்றங்கள் எதுவாக இருந்தாலும், அது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்று. குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்களை நாம் கண்டிப்பாகக் கண்டிக்க வேண்டும். கோவை சம்பவத்தில் குற்றவாளிகள் மீது உடனடியாக முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். அவர்களுக்கு மிக விரைவில், அதிகபட்ச தண்டனையை பெற்றுத் தர வேண்டும் என முழு முயற்சியோடு முதல்வர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
திருநெல்வேலி சட்டப்பேரவை தொகுதி ‘உடன்பிறப்பே வா’ சந்திப்பின்போது நானும் உடனிருந்தேன். வெற்றி பெறவில்லை என்றால் யாருடைய பதவியும் பறிக்கப்படும் என எங்கும் சொல்லப்படவில்லை. வெற்றி பெற வேண்டும் என்ற அறிவுரையை ஒரு கட்சித் தலைவர் வழங்குவது என்பது நிச்சயமாக தேவையான ஒன்று. வெற்றி பெற வேண்டும். அதற்காக அனைவரும் ஒருமித்து பாடுபட வேண்டும் என முதல்வர் அனைவரிடமும் கூறியுள்ளார்” என்று கனிமொழி எம்.பி தெரிவித்தார்.
முன்னதாக, தூத்துக்குடி முத்தையாபுரம் ஜே.எஸ்.நகரில் மாநகராட்சி சார்பில், வஉசி துறைமுக சமூக கூட்டாண்மை பொறுப்பு நிதி மூலம் ரூ.2.38 கோடியில் அமைக்கப்பட்டுள்ள மது மற்றும் போதை மறுவாழ்வு மையம், ஜே.எஸ்.நகர் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் மாநில நிதி ஆணையம் பள்ளி மேம்பாட்டு மானிய உள்கட்டமைப்பு பணிகள் நிதியில் ரூ.55 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடம், முத்தம்மாள் காலனியில் உள்ள வித்யா பிரகாசம் சிறப்பு பள்ளியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள் மற்றும் சுற்றுச்சுவர் திறப்பு விழா இன்று (நவ.7) நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமை வகித்தார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதாஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார். ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மாநகராட்சி ஆணையர் சி.பிரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி நகர்நல அலுவலர் சரோஜா, மூத்த மனநல மருத்துவர் செ.ராமசுப்பிரமணியன், வட்டாட்சியர் திருமணி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT