Last Updated : 07 Nov, 2025 12:29 PM

1  

Published : 07 Nov 2025 12:29 PM
Last Updated : 07 Nov 2025 12:29 PM

கமல்ஹாசன் பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், அன்புமணி உள்ளிட்டோர் வாழ்த்து

சென்னை: நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின், வைரமுத்து, அன்புமணி உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின்: பன்முகத்திறமையோடு தமிழ்த் திரையுலகை உலகத் தரத்துக்குக் கொண்டு சென்றிடும் தீராத கலைத்தாகமும் - பன்முகத்தன்மை மிக்க நம் நாட்டை நாசகர பாசிச சக்திகளிடமிருந்து மீட்கும் தணியாத நாட்டுப்பற்றும் கொண்டு, என் மீது அளவற்ற அன்போடு தோழமை பாராட்டும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் – கலைஞானி கமல்ஹாசனுக்கு அன்பு நிறை பிறந்தநாள் வாழ்த்துகள்.

நாடாளும் ஆட்சியாளர்கள் நெறி பிறழாது நடந்திட, நாடாளுமன்றத்தில் முழங்கிடும் தங்களது அரசியல் தொண்டும் - திரையாளும் தங்களது கலைத் தொண்டும் மென்மேலும் சிறந்திட வாழ்த்துகிறேன்.

உதயநிதி ஸ்டாலின்: இந்திய கலையுலகின் தன்னிகரற்ற ஆளுமை கலைஞானி - மாநிலங்களவை உறுப்பினரும் - மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் சாருக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

எதிர்ப்புகளுக்கு அஞ்சாமல் பாசிசத்துக்கு எதிராக மக்கள் மன்றத்திலும் - நாடாளுமன்றத்திலும் ஓங்கி ஒலிக்கும் கமல் சாரின் குரல் வெல்லட்டும். அவரது அரசியல் பயணம் மென்மேலும் சிறக்கட்டும். அன்பும் வாழ்த்தும்!

அன்புமணி ராமதாஸ்: மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும், எனது நண்பருமான உலக நாயகன் கமல்ஹாசனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நூறாண்டு நோயில்லா நிறைவாழ்வு வாழவும், சாதனைகளை படைக்கவும் வாழ்த்துகிறேன்.

வைரமுத்து: இந்தியக் கலைஅடையாளங்களுள் ஒருவர் கலைஞானி கமல்ஹாசன். கலையே வாழ்வாய்; வாழ்வே கலையாய்; மாறிப்போன மனிதர்.

வாழ்வியல் புயல்களையும் விமர்சனச் சூறாவளிகளையும் தாண்டி அவர் என்ன காரணங்களுக்காகக் கொண்டாடப்படுகிறாரோ அந்தக் காரணங்கள் வாழ்வெல்லாம் நிலைத்திருக்க வாழ்த்துகிறேன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x