Published : 07 Nov 2025 08:26 AM
Last Updated : 07 Nov 2025 08:26 AM
குளச்சல் தொகுதியை 3 முறை தொடர்ச்சியாக வென்றெடுத்த காங்கிரஸ் எம்எல்ஏ பிரின்ஸுக்கு போட்டியாக அதிமுக முன்னாள் அமைச்சர் பச்சைமால் இப்போதே வாக்குத் திரட்டும் பணியில் இருப்பதால் தொகுதி கலகலப்பாகி வருகிறது.
குமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரின்ஸ் மூன்று முறை வெற்றி பெற்றுள்ளார். கடற்கரை கிராமங்களின் மீனவர்கள் வாக்குகளே இந்தத் தொகுதியின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்திகள். இந்து, கிறிஸ்தவர் என இரு தரப்பாக பிரியும் இந்த வாக்குகளை அறுவடை செய்யவே தேர்தலுக்குத் தேர்தல் கட்சிகளுக்கு இடையே பலத்த போட்டி இருக்கும்.
இந்த நிலையில், தொகுதியில் கண்டுகொள்ளப்படாத தலையாய பிரச்சினைகள் ஏராளம் இருந்தும். “4-வது முறையும் நான்தான் எம்எல்ஏ” என நம்பிக்கையோடு சொல்கிறார் நடப்பு எம்எல்ஏ-வான பிரின்ஸ். இங்கு தொடர்ச்சியாக இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக-வால் ஒருமுறை கூட வெற்றிபெற முடியவில்லை.
அதனால் இம்முறை குளச்சலை அதிமுகவுக்குக் கொடுத்துவிட்டு பத்மநாபபுரத்தில் போட்டியிட பாஜக முடிவெடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.. அதற்கேற்ப, குளச்சலில் 2001-ல் வெற்றிபெற்று, அமைச்சராக இருந்த பச்சைமால் மீண்டும் களத்துக்கு வந்திருக்கிறார். தொகுதி தனக்குத்தான் என இன்னும் அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படாத நிலையிலும் குளச்சலில் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டார் பச்சைமால்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய குளச்சல் தொகுதி அதிமுக-வினர், “பச்சைமாலை குளச்சலில் நிறுத்த தலைமை கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டது. இங்கு 3 முறை போட்டியிட்ட அனுபவம் அவருக்கு உள்ளது. இந்து மற்றும் கிறிஸ்தவர்களின் ஒருமித்த ஆதரவையும் அவர் பெறுவார். இங்கு 15 ஆண்டுகள் எம்எல்ஏ-வாக இருந்தும் பிரின்ஸால் தனது சாதனையாக எதையுமே சொல்ல முடியாது. அதுவே பச்சைமாலுக்கு ப்ளஸ் ஆக இருக்கும்” என்றனர்.
இதுகுறித்து பச்சைமாலிடமும் பேசினோம். “குளச்சல் தொகுதியில் தேர்தல் பணிகளை ஆரம்பிக்குமாறு தலைமையில் இருந்து சொன்னதால் தான் பணிகளை தொடங்கி இருக்கிறேன். எம்ஜிஆருக்கும், இரட்டை இலைக்கும் மீனவ மக்களிடம் இன்றைக்கும் மவுசு உள்ளது. இந்தத் தொகுதியின் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியும் அவர்களின் 30 சதவீத வாக்குகள் தான் என்பதால் அதைக் குறிவைத்து பணிகளை தொடங்கி இருக்கிறோம். இந்த முறை இங்கு பிரின்ஸுக்கு வேலை இருக்காது. நான் தான் வரப்போகிறேன்... பொறுத்திருந்து பாருங்கள்” என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT