Published : 07 Nov 2025 07:04 AM
Last Updated : 07 Nov 2025 07:04 AM
விழுப்புரம்: ‘என் மீது சுண்டு விரல் பட்டாலும் அதற்குக் காரணம் அன்புமணியும் சவுமியாவும்தான்’ என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அன்புமணியை மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக்கியது மற்றும் பாமக தலைவராக்கியது என அரசியலில் இரு தவறுகளை செய்து விட்டேன்.
அமைதியாக பாமகவை நடத்தி கொண்டிருந்த நிலையில், ஒரு பிளவு ஏற்பட்டிருக்கிறது என மக்களும், பிற கட்சியினரும் நினைக்கும் அளவுக்கு அன்புமணியின் பேச்சும், செயலும் அருவருக்கத்தக்க வகையில் உள்ளது. 5 எம்எல்ஏக்களில் என்னுடன் இருவர் உள்ளனர்.
அன்புமணி கும்பலிடம் 3 பேர், தெரியாமல் சென்றுவிட்டனர். நான் நடத்திய போராட்டங்களில் வன்முறை இருக்காது. எங்களை விமர்சித்தவர்களுக்குக்கூட நாகரிகமாகப் பதில் சொல்வோம். ஆனால், என்னைப் பற்றியும், ஜி.கே.மணியைப் பற்றியும் சமூக வலைதளங்களில் கேவலமாக பேசுவதற்கு அன்புமணி தூண்டி விடுகிறார். கத்தி, வீச்சரிவாள் வைத்திருக்கும் அன்புமணி கும்பல், துப்பாக்கியை எப்போது ஏந்துவார்கள் என தெரியவில்லை.
வன்முறையுடன் அன்புமணி பேசுவதால், அதை செய்து பார்க்க வேண்டும் என அவருடன் இருப்பவர்கள் கத்தியை எடுக்கின்றனர். ஒரு கும்பலை வைத்துக்கொண்டு, அதுதான் கட்சி என்று அன்புமணி சொல்லி வருகிறார். தமிழகம் அமைதி பூங்காவாகத் திகழ வேண்டும் என்று நண்பர் கருணாநிதி அடிக்கடி கூறுவதுண்டு.
கத்தியை வைத்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுப்பது சரியில்லை. எந்த நிலையிலும் எதிர்வினை யாற்றக் கூடாது என என் பாமக சொந்தங்களை கேட்டுக்கொள்கிறேன். என் மீது சுண்டு விரல் பட்டாலும் அன்புமணியும், சவுமியாவும்தான் காரணம். அன்புமணியும், அவரது கும்பலும் திருந்த வேண்டும். ‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், இறுதியில் தருமமே வெல்லும்.’
பாமக பொதுக்குழு கூட்டம் டிச.30-ம் தேதி தலைவாசலில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தேர்தல் கூட்டணி மற்றும் கட்சியின் வளர்ச்சி குறித்து கருத்து கேட்கப்பட்டு, முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT