Published : 07 Nov 2025 06:57 AM
Last Updated : 07 Nov 2025 06:57 AM

தொழிலாளர் சட்ட நெறிமுறைகள் அதிகார வர்க்கத்தினரால் மீறப்படுகின்றன: சிஐடியு பொதுச் செயலாளர் குற்றச்சாட்டு

கோவையில் நேற்று தொடங்கிய சிஐடியு மாநாட்டில் பேசிய, அகில இந்திய பொதுச் செயலாளர் தபன்சென். | படம்: ஜெ.மனோகரன் |

கோவை: ‘தொழிலாளர் சட்ட நெறிமுறைகள் மத்தியில் ஆளும் அதிகார வர்க்கத்தினரால் மீறப்படுகின்றன’ என சிஐடியு மாநில மாநாட்டில், அகில இந்திய பொதுச்செயலாளர் தபன் சென் தெரிவித்தார். சிஐடியு தொழிற்சங்கத்தின் மாநில மாநாடு, கோவையில் நேற்று தொடங்கியது. இந்த மாநாடு நவ. 9 வரை நடைபெற உள்ளது. மாநாட்டின் தொடக்கத்தில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் செங்கொடியை ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து எடுத்து வரப்பட்ட தொழிலாளர்கள் உரிமைப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளின் நினைவு ஜோதி மாநாட்டு வளாகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. முதல்நாள் மாநாட்டு நிகழ்ச்சியில் மாநாட்டு வரவேற்பு குழு தலைவர் சி.பத்மநாபன் வரவேற்றார்.

மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தலைமை தாங்கினார். சிஐடியு அகில இந்திய பொதுச் செயலாளர் தபன்சென் மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசியதாவது: அகில இந்திய அளவிலான மாநாடு அடுத்த மாதம் 31-ம் தேதி முதல் ஜனவரி 4 வரை விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது.

தற்போது நாட்டில் தொழிலாளர்களுக்கு பல்வேறு சவால்கள் உள்ளன. இதனை தீர்த்து வைப்பதற்காக சிஐடியு, தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களிலும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். அரசியல் மாண்புகள், தொழிலாளர் சட்ட நெறிமுறைகள் மத்தியில் ஆளும் அதிகார வர்க்கத்தினரால் மீறப்படுகின்றன. கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிக பணம் சம்பாதிப்பதில் மட்டும் குறியாக உள்ளன. இதனால் தேசிய வளங்கள் சுரண்டப்படுகின்றன.

தமிழ்நாட்டில் தூத்துக்குடி துறைமுக தொழிலாளர்கள் பிரச்சினை, அனல் மின்நிலைய தொழிலாளர் பிரச்சினை, நெய்வேலி தொழிலாளர்களின் பிரச்சினைகளில் சிஐடியு பல்வேறு போராட்டங்களை நடத்தி தொழிலாளர்களின் நலன் காக்க பாடுபட்டது. மத்திய பாஜக அரசு, தொழிலாளர்களுக்கு எதிரான போக்குகளை கையாண்டு வருகிறது. தொழிலாளர் நலனுக்கான சட்டங்களை வலுவிழக்கச் செய்துள்ளது. தற்போது கொண்டு வரப்பட்ட தொழில் சட்ட திருத்தத்தில் தொழிலாளர் நலன் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா நமது நாட்டுக்கு அதிக வரி விதிக்கும்போது, பிரதமர் மோடி வாய் மூடி மவுனமாக உள்ளார். வருங்காலங்களில் மத்திய அரசுக்கு எதிராகவும், தொழிலாளர்களின் நலனுக்காகவும் நடைபெறும் போராட்டங்கள் வலுவாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

சிஐடியு தொழிற்சங்க மாநில தலைவர் சவுந்தரராசன் பேசும்போது, ‘‘மத்திய அரசுக்கு தொழிலாளர்களின் நலனில் அக்கறை இல்லை. கம்யூனிச கொள்கையை கடைபிடிக்கும் சீன நாடு பொருளாதாரத்தில் சிறப்பான முன்னேற்றத்தை அடைந்துள்ளது’’ என்றார்.

இம்மாநாட்டில் சிஐடியு அகில இந்திய தலைவர் கே.ஹேமலதா, மூத்த தொழிற்சங்க தலைவர் டி.கே.ரங்கராஜன், மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன், பி.ஆர்.நடராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாநாட்டின் முதல் நாளான நேற்று, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல்திருத்தத்தை கைவிட வேண்டும், தொழிலாளர் சட்டத் தொகுப்பு திரும்பப் பெறப்படவும், தொழிலாளர் உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x