Published : 06 Nov 2025 08:28 PM
Last Updated : 06 Nov 2025 08:28 PM

“தமிழக அரசின் முடிவே அவலங்களுக்கு காரணம்” - தூய்மைப் பணி பிரச்சினையில் சு.வெங்கடேசன் எம்.பி சாடல்

மதுரை எம்.பி சு.வெங்கடேசன் | கோப்புப் படம்

மதுரை: ”தூய்மைப் பணியை தனியாருக்கு கொடுக்கக் கூடிய தமிழக அரசின் முடிவே அனைத்து அவலங்களுக்கும் அடிப்படை காரணம்” என்று சு.வெங்கடேசன் எம்.பி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், “தூய்மைப் பணியை தனியாருக்கு கொடுக்க கூடிய தமிழக அரசின் முடிவு, அனைத்து அவலங்களுக்கும் அடிப்படை காரணம். தனியாருக்கு கொடுக்கும் முடிவை கைவிட வேண்டும். நகரங்களின் தூய்மையையும், வசிக்கும் மக்களின் சுகாதாரத்தையும் பாழாக்கும். கூடுதலான பிரச்சினை என்றால், மதுரை மாநகராட்சியில் தூய்மைப் பணி ஒரு தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் கொடுக்கப்படுகிறது.

அந்த ஒப்பந்தத்தை சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நகராட்சி நிர்வாகத் துறை தீர்மானிக்கிறது. மாநகராட்சி நிர்வாகம் அல்ல. இயல்பாக ஒரு பிரச்சினை என்ன வருகிறது என்றால், இந்த ஒப்பந்தத்தை எடுக்கக் கூடிய எந்த நிறுவனமும், அந்த மாநகராட்சிகளின் அதி்காரிகளுக்கும் கட்டுப்படுவதில்லை. அவர்கள் குரலுக்கும் செவி சாய்ப்பதில்லை. தன்னிச்சையாக செயல்படுகிறது. இந்த அவலம் தீர்க்கப்பட வேண்டும். இதற்கு அடிப்படை காரணமான தூய்மைப் பணியை தனியாருக்கு கொடுக்கும் அரசின் அடிப்படை கொள்கை முடிவை கைவிட வேண்டும்.

மதுரை மாநகராட்சியை பற்றி கடந்த 4 நாட்களாக ஊடகங்களில் வந்து கொண்டிருக்கிற செய்திகளும், ஒட்டப் பட்டுள்ள போஸ்டரும் மிகவும் வேதனையானது. அசுத்தமான நகரங்களின் பட்டியலில் மதுரை முதலாவது இடம் என்ற செய்தியை வெளியிட்டது யார்? எந்த நிறுவனம், அமைப்பு வெளியிட்டது என சோதிக்காமல், உண்மைத் தன்மையை ஆராயாமல் நாம் பெரிதும் மதிக்கக்கூடிய சில அச்சு ஊடகங்கள் கூட வெளியிட்டுள்ளது.

கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை 20 லட்சம் மக்கள் தொகைக்கு மேல் வசிக்கும் தூய்மை நகரங்களின் பட்டியலை வெளியிட்டது. அதில், 40-வது இடத்தில் மதுரை இடம் பிடித்திருந்தது. இந்த பட்டியலில் முதலிடம் பெற்ற மாநகராட்சிக்கு குடியரசு தலைவர் விருது வழங்கினார். அதனை முன்னிட்டு தான் அந்தப் பட்டியல் வெளியிடப்பட்டது. அதனையொட்டி நான் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தேன். அந்தப் பட்டியல் வெளியிடப்பட்ட குறியீடுகளில் பிரச்சினை இருக்கிறது. ஆனால், 40 இடம் என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாதது.

மதுரை மாநகரத்தின் தூய்மையை கடைபிடிக்க வேண்டும் எனக் கூறியிருந்தேன். இந்த அறிக்கைக்காக, மாமன்றக் கூட்டத்தில் கூட திமுக உறுப்பினர்களே எனக்கு எதிராக பேசினார்கள். இது நடந்து முடிந்து 4 மாதங்கள் ஆகிவிட்டது. தற்போது, அந்த 40 நகரங்கள் பட்டியலில் கடைசி 10 நகரங்களை எடுத்து அசுத்தமான நகரங்களின் பட்டியலில் மதுரை முதலிடம் என்ற ஒரு செய்தியை பாஜகவைச் சேர்ந்தவர்கள் பரப்பியுள்ளனர். எப்படி நகரின் குப்பைகள் அகற்றப்பட வேண்டுமோ? அதுபோல, பொய்களை பரப்புகிற குப்பைகளும் அகற்றப்பட வேண்டும்” என்று சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x