Published : 06 Nov 2025 03:45 PM
Last Updated : 06 Nov 2025 03:45 PM

”‘ஆப் ஆப்’னு சொல்லி ஆப்பு வைத்துவிடாதீர்கள்”- மதுரை ஆட்சியரிடம் செல்லூர் ராஜு நகைச்சுவை

மதுரை: ”ஆப், ஆப் என்று சொல்லிட்டு எங்களுக்கு கடைசியில ஆப்பு வைத்துவிடாதீர்கள்” என்று எஸ்ஐஆர் தொடர்பாக மனு கொடுக்க சென்ற இடத்தில் மாவட்ட ஆட்சியரிடம் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜு நகைச்சுவையாக கூறியது, அவருடன் சென்ற அதிமுகவினர் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

மதுரை மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜு, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், மதுரை புறநகர் நகர் கிழக்கு மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆகியோர் தலைமையில் அதிமுகவினர் தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமாரை சந்தித்து மனு ஒன்றை வழங்கினர்.

அதில், "பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்கள் (BLA.2) மூலமாக அதிகபட்சம் 50 படிவங்களை பெற்று வந்து வழங்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (BLA.2) மூலமாக பெற்றால் முறைகேடுகள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதனால், முறைகேடுகளை தவிர்க்க வீடு வீடாக சென்று வழங்கப்படும் வாக்காளர் விவரம் குறித்த பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள், சம்பந்தப் பட்ட வாக்கு சாவடி நிலை அலுவலர்களால் மட்டுமே பெறப்பட வேண்டும்” என்று கூறியிருந்தனர்.

மனு கொடுக்கும்போது, முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, ”சார், எஸ்ஐஆரில் தவறு நடக்காமல் ‘ஆப்’ பயன்படுத்துகிறோம் என்று சொல்கிறீர்கள், எங்களுக்கு ஒன்னும் புரியல, ஆப், ஆப் என்று சொல்லிட்டு கடைசியில எங்களுக்கு ஆப் வைத்துவிடாதீர்கள்” என்று செல்லூர் ராஜூ கூறினார். செல்லூர் ராஜூவின் இந்த டைமிங் நகைச்சுவையால், உடன் சென்ற அதிமுகவினர், அதிகாரிகள் வாய்விட்டு சிரித்துவிட்டனர்.

அதன் பிறகு செல்லூர் ராஜூ செய்தியாளர்ளிடம் கூறுகையில், ”தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் இந்த வாக்காளர்கள் திருத்தப்பட்டியலில் 50 வாக்காளர்கள் வரை அரசியல் கட்சியில் உள்ள வாக்குசாவடி நிலை முகவர்கள் வாங்கிக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதில் திமுக முறைகேடு செய்ய வாய்ப்புள்ளது.

ஏனென்றால் இந்த வாக்காளர்கள் திருத்தப்பட்டியலில் திமுக இரட்டை வேடம் போட்டு வருகிறது. திமுக வாக்காளர்கள் திருத்த வழிமுறை கூடாது என்று நீதிமன்றத்தில் சென்றுவிட்டு இது தொடர்பாக நடக்கும் ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்று வருகிறது. இப்படி ஆதரவும், எதிர்ப்பும் என்ற இரண்டு நிலைப்பாட்டில் திமுக உள்ளது. ஏழை மக்களை திமுக தில்லுமுல்லு செய்து நீக்கவும் வாய்ப்புள்ளது.

எனது மேற்கு தொகுதியில் திமுகவினர் வருவாய்த்துறை அதிகாரி என்று கூறிக்கொண்டு பொதுமக்களின் ஆதார் மற்றும் பேன் கார்ட் நகல்களை பெற்று சென்றுள்ளனர். இதுகுறித்து ஏற்கனவே அப்போது மாவட்ட ஆட்சியாளராக இருந்த சங்கீதாவிடம் முறையிட்டோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது போன்ற தவறுகள் மீண்டும் நடக்கக் கூடாது” என்றார்.

மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரிய புள்ளான், அமைப்புச் செயலாளர் மகேந்திரன், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசன், எஸ்.எஸ்.சரவணன், அண்ணாதுரை, மாணிக்கம் மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x