Published : 06 Nov 2025 03:22 PM
Last Updated : 06 Nov 2025 03:22 PM
மதுரை: தமிழக சட்டப்பேரவை முன்பு தியாகி சங்கரலிங்கனார் சிலை நிறுவக்கோரிய மனுவை அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரைச் சேர்ந்த செல்வகுமார், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், "தமிழக அரசின் தலைமை செயலகம் அல்லது தமிழ்நாடு சட்டப்பேரவையின் ஏதேனும் ஒரு கட்டிடத்துக்கு சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரலிங்கனார் பெயர் வைக்கவும், சட்டப்பேரவை முன்பு சங்கர லிங்கனார் சிலை நிறுவவும், விருதுநகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிக்கு சங்கரலிங்கனார் பெயர் சூட்டவும், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் சங்கரலிங்கனாரின் வாழ்க்கை வரலாற்றை மாணவர்களுக்கு கற்பிக்கும் வகையில் குறும்படம் தயாரித்து வெளியிடவும் உத்தரவிட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வு, "மனுதாரர் கோரிக்கை தொடர்பாக அனுப்பியுள்ள மனுவை தலைமைச் செயலர் ஒரு வாரத்தில் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்ப வேண்டும். பின்னர் மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என உத்தரவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT