Last Updated : 06 Nov, 2025 03:14 PM

2  

Published : 06 Nov 2025 03:14 PM
Last Updated : 06 Nov 2025 03:14 PM

வேறு பிரச்சினைகள் இல்லாததால் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டுகிறது பாஜக - சேகர் பாபு விமர்சனம்

சென்னை: திமுக அரசில் குற்றம் சொல்வதற்கு வேறு எதுவும் இல்லாததால், சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி பாஜக போராட்டத்தில் ஈடுபடுவதாகவும், இது அரசியலுக்காக போடுகின்ற வேடம் என்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ”தமிழக முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (நவம்.06) சென்னை கொளத்தூர், பூம்புகார் நகரில் கட்டப்பட்டு வரும் கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புதிய கட்டிடம் மற்றும் ராஜாஜி நகரில் கட்டப்பட்டு வரும் மூத்த குடிமக்கள் உறைவிடம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: இந்து சமய அறநிலையத் துறை திருக்கோயில்கள் சார்பில் சென்னை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழக முதல்வர் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின், திருக்கோயில்கள் சார்பில் 10 கல்லூரிகள் அமைக்கப்படும் என்று அறிவிப்பு தரப்பட்டு பல்வேறு சட்டப் போராட்டங்களுக்கு பிறகு, 4 கல்லூரிகள் தொடங்கப்பட்டன.

இக்கல்லூரிகளில் பொருளாதாரத்தில் பின் தங்கிய 2,000-க்கும் மேற்பட்ட மாணவச் செல்வங்கள் கல்வி பயின்று வருகின்றனர். இக்கல்லூரிகள் அதிக கட்டணம் கொடுத்து படிக்க இயலாத மாணவச் செல்வங்களுக்கு மிகப்பெரிய வரப் பிரசாதமாக திகழ்கின்றது.

கொளத்தூர், கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியானது கடந்த 4 ஆண்டுகளாக எவர்வின் பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது 800 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இக்கல்லூரி மாணவர்களுக்கு நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியின் மூலம் கல்விக் கட்டணம் மற்றும் கல்வி உபகரணங்கள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் பயின்று பட்டப்படிப்பை நிறைவு செய்த மாணவர்கள் வளாக நேர்காணல் மூலம் பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணி நியமனம் பெற்று ரூ.30,000 முதல் ரூ.70,000 வரை ஊதியம் பெற்று வருகின்றனர்.

இக்கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம் கட்டும் வகையில் முதல்வரால், கட்டுமானப் பணிகள் 2024 டிசம்பரில் தொடங்கி வைக்கப்பட்டன. இக்கட்டத்தில் 24 வகுப்பறைகள், ஆய்வகங்கள், கூட்டரங்குகள், நூலகம், உணவகம், வாகன நிறுத்தும் இடம் உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டு வருகின்றன. வரும் கல்வியாண்டில் இக்கல்லூரியானது புதிய கட்டடத்தில் செயல்படும்.

இரண்டாவது கட்டமாக சுமார் 2,500 மாணவ செல்வங்கள் படிக்கின்ற அளவிற்கு வகுப்பறைகள் உள்ளிட்ட வசதிகளும், தங்கும் விடுதி, விளையாட்டு மைதானம் மற்றும் உடற்பயிற்சி கூடம் போன்றவற்றையும் அமைக்க திட்டமிட்டுள்ளோம்.

காஞ்சிபுரம் வரத ராஜ பெருமாள் திருக்கோயில் தங்கப் பல்லி காணாமல் போனதாக அளிக்கப்பட்ட புகாரில் உண்மை தன்மை இருந்தால் அதன்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம். இது குறித்த விளக்கத்தை காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் அறிக்கையாக அளிக்க உள்ளார். நயினார் நாகேந்திரனின் மகன் மீது பதியப்பட்டிருக்கின்ற வழக்கு தன் குடும்பம் வாழ வேண்டும் என்பதற்காக அவருடைய சட்ட மீறலுக்காக பதியப்பட்ட வழக்கா அல்லது கட்சிக்காக பதியப்பட்ட வழக்கா என்பதை அவரே தெரிவிக்க வேண்டும்.

குற்றங்கள் நடக்கும் போது தடுப்பது ஒரு வகை, நடந்த குற்றங்களுக்கு நடவடிக்கை என்பது மற்றொரு வகையாகும். இந்த ஆட்சி குற்றங்களை தடுக்கின்ற முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருக்கின்றது. கோவை சம்பவத்தில் ஈடுபட்ட 3 குற்றவாளிகளை துப்பாக்கியால் சுட்டு பிடித்து கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கினை 30 நாட்களுக்குள் நடத்தி முடித்து அதற்குரிய தண்டனை கிடைக்கச் செய்திட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இது சட்டத்தின் ஆட்சி. ஆகவே குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தப்பிப்பதற்கு ஏதாவது முயற்சி எடுத்தால் கேளுங்கள், நடந்த சம்பவம் இனி நடக்கக்கூடாது என்பதில் இந்த ஆட்சி உறுதியாக இருக்கின்றது. மணிப்பூரை போல் கண்டுகொள்ளாமல் கண்ணை மூடிக்கொண்டு இந்த ஆட்சி உறங்கிக் கொண்டிருக்கவில்லை.

”ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பம்பூ சர்க்கரை” என்று ஒரு பழமொழி உண்டு. எந்த பிரச்சனையுமே கையில் கிடைக்காதவர்கள் சட்டம்- ஒழுங்கு பிரச்சனைகளை கையில் எடுத்து ஆடுவது தேர்தலை மையப்படுத்தி செய்கின்ற ஒரு போராட்டமே தவிர இது உண்மை இல்லை என்று போராட்டம் செய்பவர்களுக்கே தெரியும். எந்த குற்ற சம்பவம் நடந்தாலும் அதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. பாஜகவின் போராட்டம் அரசியலுக்காக போடுகின்ற வேடம் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இவ்வாறு அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

இந்த ஆய்வுகளின்போது, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், தலைமைப் பொறியாளர் பெரியசாமி, கூடுதல் ஆணையர் ஹரிப்ரியா மற்றும் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x