Published : 06 Nov 2025 07:14 AM
Last Updated : 06 Nov 2025 07:14 AM
சென்னை: தமிழக மகளிரை ஏமாற்றுவதுதான் உரிமைத் தொகை திட்டமா என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் மகளிர் உரிமைத் தொகை கோரி பெறப்பட்ட 49,429 மனுக்களில், 19,290 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது கவலையளிக்கிறது. ‘விடுபட்டோர் எல்லோருக்கும் கண்டிப்பாக மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்’ என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்த 2 நாட்களுக்குள்ளேயே திமுக அரசின் சாயம் வெளுத்துவிட்டது.
இப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் ‘தகுதியற்றவர்கள்’ என்ற போர்வையில், சுமார் 40 சதவீத மனுக்களை நிராகரித்து, நாலாபுறமும் விளம்பரம் மட்டும் வெளியிட்டு, மகளிரை ஏமாற்றுவதுதான் உரிமைத் தொகை திட்டமா? ஏற்கெனவே ஆட்சிப் பொறுப்பேற்று 28 மாதங்களுக்கு இத்திட்டத்தை கிடப்பில் போட்டனர்.
தங்கள் கணக்குப்படி ‘தகுதியான’ மகளிர் ஒவ்வொருவருக்கும் ரூ.28 ஆயிரத்தை தராமல் ஏமாற்றினர். நாள்தோறும் மனு கொடுக்க கால்கடுக்க நிற்கவைத்து அலைக்கழித்தனர். இதெல்லாம் போதாதென்று, மேடைதோறும் ஒரு போலி அறிவிப்பை வேறு வெளியிட்டு வஞ்சிப்பது ஏன்? எளியோரை ஏமாற்றிக் களித்தோருக்கு ஏமாற்றமே மிஞ்சும். வெற்று அறிவிப்புகள் மூலம், மகளிரை நம்பவைத்து ஏமாற்றிய பாவம் திமுக அரசை அழிவை நோக்கி இட்டுச் செல்லும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT