Published : 06 Nov 2025 06:30 AM
Last Updated : 06 Nov 2025 06:30 AM
சென்னை: தனியார் பள்ளிக் கட்டிடங்களுக்கு டிடிசிபி ஒப்புதலுடன் நிரந்தர தொடர் அங்கீகாரம் பெறுவதில் உள்ள குளறுபடிகளை 3 மாதங்களில் நிவர்த்தி செய்யுமாறு, தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கே.பழனியப்பன், சென்னை உயர் நீதிமன்றத்தில தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு திட்டமிடல் சட்டத்தின் பிரிவு 47-ஏ-யின்படி, அனைத்து பள்ளிக் கட்டிடங்களுக்கும் கட்டிட அனுமதிபெற வேண்டும்.
நகர் ஊரமைப்பு இயக்ககம் (டிடிசிபி) ஒப்புதல் அளித்த பிறகே, அந்த பள்ளிகளுக்கான அங்கீகாரம் தொடர்ந்து நீட்டிக்கப்படும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அந்த அரசாணை ஒரு வரையறுக்கப்பட்ட காலத்துக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பதால், ஒப்புதல் பெறுவதில் சிரமம் ஏற்பட்டது.
இந்நிலையில், கடந்த மே 31-ம் தேதி வரை கட்டப்பட்டுள்ள அனைத்து தனியார் பள்ளிகளின் கட்டிடங்களுக்கும் டிடிசிபி அனுமதி பெறுவதில் விலக்கு அளித்து அந்த பள்ளிகளுக்கான தொடர் அங்கீகாரத்தை நீட்டிக்க வேண்டும் என அரசுக்கு, தனியார் பள்ளிகளின் இயக்குநர் பரிந்துரை செய்திருந்தார்.
ஆனால், அதன்படி கல்வித் துறை முதன்மைச் செயலாளர் எந்த முடிவும் எடுக்கவில்லை. எனவே, தனியார் பள்ளிகளின் கட்டிடங்களுக்கு டிடிசிபி கட்டிட வரைபட அனுமதி பெறுவதில் உள்ள குளறுபடிகளை சரிசெய்து, தொடர் அங்கீகாரம் வழங்குவதை முறைப்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார். நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இந்த வழக்கு விசாரணை நடந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.சுரேஷ்குமாரும், அரசு தரப்பில் வழக்கறிஞர் எஸ்.பிரபாகரனும் ஆஜராகி வாதிட்டனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “மனுதாரரின் சங்கத்தில் உள்ள பள்ளிகள் இதுதொடர்பாக கல்வித் துறை முதன்மைச் செயலருக்கு தனித்தனியாக மனு அளிக்க வேண்டும். தனியார் பள்ளிகளின் இயக்குநர் அளித்த பரிந்துரையை அடிப்படையாக கொண்டு, அந்த பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெறுவதில் உள்ள குளறுபடிகளை நிவர்த்தி செய்து முதன்மைச் செயலர் 3 மாதங்களில் முடிவு எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT