Published : 06 Nov 2025 10:28 AM
Last Updated : 06 Nov 2025 10:28 AM

“திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தவெக இருக்காது!” - விஜய்க்கு அலாரம் அடிக்கும் செல்லூர் ராஜு

சட்டப்பேரவை, பொதுமேடைகள், பத்திரிகையாளர் சந்திப்பு என எல்லா இடங்களிலும், மனதில் பட்டதை வெள்ளந்தியாகப் பேசி, கலகலப்பை ஏற்படுத்தி, அனைவரையும் கவரும் இயல்பு கொண்டவர் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு. செங்கோட்டையனை நீக்கிய விவகாரத்திலும் தன் மனதுக்குப் பட்டதை தயங்காமல் சொல்லி இருக்கும் ராஜு, ‘இந்து தமிழ் திசை’க்கு அளித்த சிறப்புப் பேட்டியிலிருந்து…

சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை (எஸ்ஐஆர்) எதிர்த்து திமுக உச்ச நீதிமன்றம் சென்றுள்ளதே..?

வாக்காளர்களை ஏமாற்ற திமுக போடும் நாடகம் இது. தொகுதி வாரியாக நடந்த எஸ்ஐஆர் கூட்டத்தில், திமுக பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். எதிர்ப்பு தெரிவிப்பது என்றால் இக்கூட்டத்தை புறக்கணித்திருக்க வேண்டியதுதானே… இப்பிரச்சினையை எழுப்புவதன் மூலம் பிரதமர் மோடிஜிக்கு எதிராக ஒரு எதிர்ப்பு உணர்வை உருவாக்கலாம் என்று பார்க்கின்றனர்.

பவன் கல்யாணுக்கு தந்தது போல், துணைமுதல்வர் பதவி ஆசை காட்டியும், உங்கள் கூட்டணிக்கு விஜய் வர மறுத்துவிட்டாரே..?

விஜய்க்கு துணை முதல்வர் தருகிறேன் என்று இபிஎஸ் சொன்னாரா? எங்கள் கட்சியைப் பொறுத்தவரை பொதுச்செயலாளர் சொன்னால்தான், அதற்கு பதில் சொல்ல முடியும். கூட்டணி தொடர்பாக நாங்கள் பேசவில்லை.

திமுக-விடமிருந்து, தமிழகத்தை மீட்டு மக்களாட்சி அமைப்போம் என்கிறாரே விஜய்?

அவர் புதிதாக கட்சி தொடங்கி இருக்கிறார். ஒரு கட்சியின் தலைவர், அவர்களது தொண்டர்களை, உற்சாகப்படுத்தவும், நம்பிக்கை ஊட்டவும் அப்படித்தான் பேசுவார். பனையூரிலிருந்து அறிக்கை கொடுப்பதோடு, மக்களைச் சந்தித்து, அவர்களது உணர்வுகளையும் அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

கரூர் சம்பவத்தை வைத்து தவெக-வுக்கு திமுக நெருக்கடி கொடுக்கிறதா?

எம்ஜிஆர் அதிமுக-வை ஆரம்பித்தபோது, தொண்டர்கள், நிர்வாகிகள் மீது பல வழக்குகளைப் போட்டு கலைஞர் அடக்கப் பார்த்தார். ஆனால், தொண்டர்களும், மக்களும் எம்ஜிஆர் பின்னால் அணி திரண்டு நின்றனர். அடக்குமுறைகளை மீறி அதிமுக வளர்ந்தது. இதையெல்லாம் ஒப்பிட்டுப் பார்த்தால், விஜய் கட்சிக்கு நெருக்கடி என்று ஒன்றும் இல்லை. ஆனால், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டால், தவெக-வே இருக்காது.

விஜய் சினிமாவில் நடிக்கப் போய்விடுவார். தியேட்டர்கள் எல்லாம் அவர்கள் (திமுக) கையில் இருப்பதால், அதுவும் முடியுமா என்று தெரியவில்லை. எனவே, தமிழக மக்கள் நலனுக்காகவும், என்னை நம்பி வந்த தொண்டர்கள் நலனுக்காவும் மத்திய அரசுடன் கூட்டணியாக இணைந்து செயல்படுகிறேன் என கடந்த காலங்களில் எம்ஜிஆர் முடிவெடுத்து செயல்பட்டதை விஜய் நினைவில் கொள்ள வேண்டும்.

அதிமுகவில் 53 ஆண்டுகாலம் பயணித்த செங்கோட்டையனை நீக்கியது சரியான முடிவா?

செங்கோட்டையன் அண்ணன் ஒரு சீனியர். கட்சியில் மனஸ்தாபங்கள் இருந்தால், ஈகோ பார்க்காமல், தனிப்பட்ட முறையில் பொதுச்செயலாளரைச் சந்தித்து அதனை கூறி இருக்க வேண்டும். அதை விடுத்து, அதிமுக-வை எதிர்க்க வேண்டும் என்று செயல்படும் ஒரு குரூப் உடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்து பேட்டி கொடுத்தது சரியா?

உங்களுக்கும் மனக்குறை உள்ளது என்று சொல்லி இருக்கிறீர்களே... அதை பொதுச்செயலாளரிடம் எப்போது சொல்லப் போகிறீர்கள்?

எனக்கு மனக்குறையே இல்லை. அப்படியே இருந்தாலும், அதை உங்களிடம் எப்படிச் சொல்வேன்?

தன்மீது ஊழல் குற்றச்சாட்டுகளைச் சொன்ன எஸ்டிஎஸ் போன்றவர்களைக் கூட எம்ஜிஆர் மன்னித்து ஏற்றுக் கொண்டார். அது போன்ற பெருந்தன்மை இபிஎஸ் இடம் இல்லையே?

எல்லோருமே தலைவர், அம்மா ஆக முடியாது. இன்று இருக்கும் காலச் சூழ்நிலைக்கேற்றவாறு, இபிஎஸ் முடிவெடுக்கிறார். கட்சிக்கு எது நல்லதோ அதைச் செய்கிறார்.

மக்களவைத் தேர்தலில் அதிமுக-வுக்கு ஏற்பட்ட பின்னடைவு இப்போது சரி செய்யப்பட்டு விட்டதா?

மக்களவைத் தேர்தல், சட்டசபைத் தேர்தல் என இரண்டையும் இரண்டு விதமான பார்வையோடு அணுகி தமிழக மக்கள் வாக்களிப்பார்கள். உதாரணமாக, 1980 மக்களவைத் தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணியை வெற்றி பெற வைத்த தமிழக மக்கள், அடுத்து வந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக-வுக்கு வாக்களித்து எம்ஜிஆரை முதல்வர் ஆக்கினார்கள். அதே நிலைதான் இப்போதும் நடக்கும்.

இந்த முறை உங்களை எதிர்த்து அமைச்சர் மூர்த்தி போட்டியிடப் போகிறாராமே..?

நிற்கட்டும் சார். நின்றால் தான் தெரியும். கடந்த 15 ஆண்டுகளாக நான் எம்எல்ஏ-வாக உள்ளேன். இதுவரை ஒருமுறை கூட, மக்கள் என்னை மறித்து கேள்வி கேட்டதில்லை. ஆனால், சமீபத்தில் மாடக்குளத்திற்கு அமைச்சர் மூர்த்தி சென்றபோது, மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சராக இருக்கும்போதே இவ்வளவு எதிர்ப்பு என்றால், நாளைக்கு தேர்தல் வந்தால் இவரால் தொகுதிக்குள் அச்சமின்றி செல்ல முடியுமா?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x