Published : 06 Nov 2025 10:25 AM
Last Updated : 06 Nov 2025 10:25 AM
“சொன்னபடி முதல்வர் ஸ்டாலின் செய்துகொடுக்காததால் என் தொகுதி மக்கள் என்னை, ‘நீயெல்லாம் என்னய்யா எம்எல்ஏ... இந்தத் திட்டத்தைக் கூட உன்னால கொண்டுவர முடியலையே’ என்று திட்டுகிறார்கள்” தென்காசி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ-வான பழனி நாடார் தான் இப்படி புலம்பி இருக்கிறார்.
இரட்டைகுளம் - ஊத்துமலை கால்வாய் திட்டம் என்பது தென்காசி தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது தென்காசி தொகுதி பிரச்சாரத்துக்கு வந்த ஸ்டாலின், “திமுக ஆட்சிக்கு வந்ததும் இரட்டைகுளம் - ஊத்துமலை கால்வாய் திட்டத்தை செயல்படுத்துவோம்” என வாக்குறுதி அளித்தார்.
ஆனால், கடந்த நாலரை ஆண்டுகளில் அதற்கான எந்த நகர்வும் நடக்கவில்லை. இந்த நிலையில், இது விஷயமாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தென்காசி எம்எல்ஏ-வான பழனி நாடார், “இரட்டைகுளம் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று ஸ்டாலின் சொன்னதால் தான் கடந்த முறை நான் வெற்றி பெற்றேன்.
ஆனால், அதற்கான வேலைகள் நடக்கவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தொகுதியின் முக்கியமான 10 பிரச்சினைகளை கோரிக்கை மனுவாக எழுதிக் கொடுக்கும்படி அனைத்துக் கட்சி எம்எல்ஏ-க்களிடமும் முதல்வர் ஸ்டாலின் கேட்டிருந்தார். அப்போது, இரட்டைகுளம் கால்வாய் திட்டம், ஆலங்குளம் ஒன்றியத்தை இரண்டாக பிரித்து ஊத்துமலையை தலைமையிடமாக கொண்டு ஊராட்சி ஒன்றியம் அமைப்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை நானும் எழுதிக் கொடுத்திருந்தேன்.
அண்மையில் தென்காசிக்கு வந்திருந்த முதல்வர் எனது கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து பேசுவார் என எதிர்பார்த்தேன். ஆனால், தென்காசிக்காக முதல்வர் அறிவித்த 10 அறிவிப்புகளில் இரட்டைகுளம் கால்வாய் திட்டம் இல்லாமல் போனதில் நானும் எனது தொகுதி மக்களும் மிகுந்த வருத்தமடைந்தோம்.
என் தொகுதி மக்கள், ‘நீயெல்லாம் என்னய்யா எம்எல்ஏ... இந்த திட்டத்தைக்கூட கொண்டுவர முடியலையே’ என்று என்னைத் திட்டுகிறார்கள். இரட்டைகுளம் கால்வாய் திட்டத்தை அறிவித்தால் மட்டும்தான் இனி தென்காசி தொகுதிக்குள் ஓட்டுக் கேட்டுச் செல்ல முடியும். இல்லாவிட்டால், ஓட்டுக் கேட்டுச் செல்லும்போது விபரீதம் ஏற்படும்.
எனவே, இத்திட்டத்தை முதல்வர் நிறைவேற்றித் தர வேண்டும். இத்திட்டத்துக்கான நிலத்தை அரசு கையகப்படுத்தி, கால்வாய் வெட்டித் தர அனுமதித்தால் நானே எனது சொந்தச் செலவில் கால்வாய் வெட்டிக் கொடுத்துவிடுவேன்.
தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு முழுமையாக நிறைவேற்றிவிட்டதா என்று கேட்டால் அதற்கு என்னிடம் விடை இல்லை. நான் சொன்னால் குறை சொல்வதுபோல் ஆகிவிடும். அரசை குறை சொல்வதற்கு எனக்குத் தகுதி இல்லை. அரசு நல்ல முறையில் செயல்படுகிறது.
காங்கிரஸ் தலைமை மூலமும் சட்டப்பேரவையிலும் பல முறை இத்திட்டத்தை வலியுறுத்திவிட்டேன். இத்திட்டம் அறிவிக்கப்படுவதாகத்தான் இருந்தது. எப்படி மாறியது என்று தெரியவில்லை. காங்கிரஸ் எம்எல்ஏ என்பதால் என்னை ஒதுக்குகிறார்களா என்றும் தெரியவில்லை” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT