Published : 06 Nov 2025 08:56 AM
Last Updated : 06 Nov 2025 08:56 AM
தமிழக அரசியலில் அடுத்த சில வாரங்களில் பெரிய மாற்றங்கள் ஏற்பட உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி தருமபுரியில் தெரிவித்தார். தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் ஈச்சம்பாடி பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஈச்சம்பாடி அணையில் இருந்து உபரிநீர் நீரேற்றும் திட்டத்தை செயல் படுத்த வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி தலைமையில் நேற்று ஈச்சம்பாடி அணை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தின்போது, ‘விவசாயிகளுக்கு பயனளிக்கும் எந்த திட்டத்தையும் திமுக அரசு செயல்படுத்தவில்லை. மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் நீர்ப்பாசன திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் உபரி நீர் திட்டம் உள்ளிட்ட பாசன திட்டங்கள் அனைத்தும் நிறை வேற்றப்படவில்லை’ என அன்புமணி பேசினார்.
ஆர்ப்பாட்ட முடிவில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: இன்றுடன் பாமக-வின் உரிமை மீட்பு பயணம் 100-வது நாளை நிறைவு செய்கிறது. அதையொட்டி, ஈச்சம்பாடி அணைக்கட்டு உபரி நீரை நீரேற்றம் செய்து 60 ஏரிகளுக்கு நிரப்பும் திட்டம் கோரி விவசாயிகளுடன் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம். இந்த திட்டம், கூடுதலாக 8,000 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி வழங்கும்.
தமிழகத்துக்கு ரூ.11 லட்சத்து 32 ஆயிரம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என முதல்வர் கூறும் தகவல்கள் அனைத்தும் பொய். தற்போதுவரை தமிழகத்துக்கு ரூ.1 லட்சம் கோடிக்கு கூட முதலீடுகள் ஈர்க்கப்படவில்லை. இந்த உண்மைகளை தெரியப்படுத்தும் வகையில் பாமக சார்பில் தயாராகி வரும் புத்தகம் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. அண்மையில் கோவையில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு குடிபோதை தான் முக்கிய காரணம்.
இந்தியாவிலேயே போதை பொருள் பயன்பாட்டில் பஞ்சாப் மாநிலம் முதலிடத்திலும், பின்னர் கேரள மாநிலம் முதலிடத்திலும் இருந்தது. தற்போது தமிழ்நாடு போதைப்பொருள் புழக்கத்தில் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் கிடைக்கக்கூடிய அனைத்து போதை பொருட்களும் தமிழகத்தில் கிடைக்கிறது.
தேர்தலின்போது பணத்தை கொடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்கி வெற்றிபெறலாம் என கணக்குபோடும் திமுக-வுக்கு தகுந்த பாடம் புகட்டுவோம். எப்படியும் வெற்றி பெற்றுவிடலாம் என்ற திமுகவின் எண்ணம் நிறைவேறாது. தமிழக அரசியலில் சில வாரங்களில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தோற்கடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT