Published : 06 Nov 2025 09:55 AM
Last Updated : 06 Nov 2025 09:55 AM
அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக தன் மீது விசாரணைகள் ஏவிவிடப்படுவதாக குற்றம்சாட்டும் அரசியல் வாதிகளைத்தான் பார்த்திருக்கிறோம். ஆனால் இதிலிருந்து மாறுபட்டு, “என் மீது சிபிஐ விசாரணை நடத்தி நான் குற்றமற்றவன் என்பதை நிரூபியுங்கள்” என புதுச்சேரி அரசியல்வாதி ஒருவர் புரட்சி செய்திருக்கிறார்.
புதுச்சேரியில் மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கத்துக்கும் முன்னாள் அமைச்சரும் தற்போதைய டெல்லி சிறப்புப் பிரதிநிதியுமான மல்லாடி கிருஷ்ணாராவுக்கும் இடையே மோதல் உச்சமடைந்து வருகிறது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றனர். அண்மையில் ஏனாம் சென்றிருந்த வைத்திலிங்கம், “மல்லாடி அமைச்சராக இருந்த போது கமிஷனை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டார்.
அவரால் ஏனாம் எந்த வளர்ச்சியும் பெறவில்லை” என்று குற்றம்சாட்டினார். இதற்கு பதிலடி கொடுத்த மல்லாடி கிருஷ்ணாராவ், “என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு சிபிஐ விசாரணைக்கு தயாராக உள்ளேன். 2008 முதல் 2011 வரை கலால் துறை அமைச்சராக இருந்தபோது மதுபான தொழிற்சாலைகளிடம் மாதந்தோறும் கமிஷன் பெற்றது யார் என நிரூபிக்கவும் தயாராக உள்ளேன்” என்று வைத்திலிங்கத்தை வாரினார்.
இந்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ-வான பாலன் ஏனாம் தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகளுடன் வந்து ஆளுநர் கைலாஷ்நாதனை சந்தித்து, ஏனாம் தொகுதி மக்களுக்கு மழை நிவாரணம் கேட்டு மனு அளித்தார். அதோடு சேர்த்து, மல்லாடி கிருஷ்ணாராவ் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும்’ எனவும் தனியாக இன்னொரு மனுவையும் கொடுத்தார் பாலன்.
இதையடுத்து, பதிலுக்கு மல்லாடி கிருஷ்ணாராவ் ஆளுநருக்கு அனுப்பிய மனுவில், ‘சமீபகாலமாக யூனியன் பிரதேசத்தில் சில தொகுதிகளில் எனது செல்வாக்கிற்கு பயந்து சில அரசியல்வாதிகள் சமூக ஊடகங்களில் பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பி வருகின்றனர். பல லெட்டர் பேடு கட்சிகளும் எனமீது சில குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். தற்போது காங்கிரஸ் கட்சியானது முன்னாள் எம்எல்ஏ பாலன் மூலம் என் பெயருக்கு களங்கம் கற்பிக்கும் விதமாக சில குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.
எனது வாழ்க்கையில் எம்எல்ஏ, மேயர், அமைச்சர் என பல பொறுப்புகளை வகித்துள்ளேன். எனது நேர்மையை மீண்டும் உறுதிப்படுத்தவும், நியாயத்தை நிலைநிறுத்தவும் என்னை டெல்லி சிறப்பு பிரதிநிதி பொறுப்பில் இருந்து நீக்கி உங்கள் மட்டத்தில் உடனடியாக விரிவான முதல்கட்ட விசாரணை நடத்துங்கள்.
இன்று வரை நான் பொறுப்பு வகித்த அனைத்து துறைகள் சார்ந்தும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தன்னார்வத்துடன் கேட்கிறேன். இந்த விசாரணைக்கு எந்த நேரத்திலும் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறேன். என் மீது நடத்தப்படும் விசாரணையானது அரசியல் நோக்கத்துடன் கூடிய பொய்களை அம்பலப்படுத்தும்’ என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT