Published : 06 Nov 2025 07:10 AM
Last Updated : 06 Nov 2025 07:10 AM
மதுரை: திண்டுக்கல்லைச் சேர்ந்த முத்து, கல்யாணி, சிவசாமி, காளிமுத்து உள்ளிட்ட 30 பேர், தங்களுக்கு சொந்தமான இடத்தை அரசு கையகப்படுத்தியதற்கான இழப்பீட்டு தொகை கேட்டு தொடர்ந்த வழக்கில் ரூ.4,37,42,783 இழப்பீடு வழங்குமாறு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து அரசுத் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், இழப்பீட்டு தொகையை 8 வாரத்தில் வழங்க உத்தரவிட்டது. ஆனால், இழப்பீடு வழங்கப்படவில்லை.
மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன், “நிலம் கையகப்படுத்தியது தொடர்பான நிலுவை வழக்குகளுக்காக, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளஅனைத்து டாஸ்மாக் கடைகளின் தினசரி விற்பனைத் தொகையை வைப்புத் தொகையாக நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவை நிறைவேற்றாததால் முத்து உள்ளிட்ட 30 பேரும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தனர். இந்த மனு நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் முத்து கணேசபாண்டியன் வாதிட்டார். கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் வாதிடும்போது, “நீதிமன்ற உத்தரவை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளது” என்றார்.
பின்னர் நீதிபதிகள், “திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளின் அக்.16 முதல் நவ.6 வரையான வருமானம் மற்றும் வங்கி விவரங்களுடன் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் மற்றும் மாவட்ட மேலாளர் ஆகியோர் நாளை (நவ.7) ஆஜராக வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT