Last Updated : 05 Nov, 2025 09:06 PM

3  

Published : 05 Nov 2025 09:06 PM
Last Updated : 05 Nov 2025 09:06 PM

“பிஹார் தோல்வி உறுதியானதால் ராகுல் காந்தி மீண்டும் கட்டுக் கதைகளை பரப்புகிறார்” - வானதி சீனிவாசன்

கோவை: பிஹாரில் தோல்வி உறுதியாகிவிட்டதால் மீண்டும் கட்டுக் கதைகளை பரப்புகிறார் ராகுல் காந்தி என, பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு நவம்பர் 6ம் தேதி நடக்கிறது. 'இண்டி’ கூட்டணியின் தோல்வி உறுதியாகியுள்ளது. அந்த விரக்தியில் மக்களை திசை திருப்பும் நோக்கத்தில் வழக்கம் போல் வாக்கு திருட்டு என்ற பொய்யை முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியிருக்கிறார்.

அது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையமும், உச்ச நீதிமன்றமும் அவரிடம் ஆதாரம் கேட்டும் கொடுக்கவில்லை. எனது வாக்கு நீக்கப்பட்டுள்ளது என பிஹாரில் யாரும் புகார் தெரிவிக்கவில்லை என தேர்தல் ஆணையம் அறிவித்த பின், ராகுல் காந்தியின் பொய் பிரச்சாரம் அம்பலமானது. தற்போது ஹரியானாவில் லட்சக் கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக வழக்கம் போல பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

இது தகவல் தொழில்நுட்ப யுகம். பொய்யும், புரட்டும் அடுத்த நொடியே அம்பலப்பட்டு விடும். அதன் காரணமாகவே தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைத்துள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் போன்ற பணிகள் நடக்கும் போது, அதை கண்காணிக்கவே அரசியல் கட்சிகளின் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் உள்ளனர். அவர்களை மீறி வாக்குச்சாவடிக்கு தொடர்பில்லாதவர்களை யாரும் நீக்க முடியாது.

பாகிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக ஊடுருவி வந்தர்கள்தான் காங்கிரஸ் உள்ளிட்ட அக்கட்சி கூட்டணியின் வாக்கு வங்கி. சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியால் அவர்கள் இந்தியாவில் வாக்காளர்களாக முடியாது என்பதால் தான், இதை ‘இண்டி’ கூட்டணி எதிர்க்கிறது.

பொய்களை முதலீடாகக் கொண்டு அரசியல் செய்யும் ராகுல் காந்திக்கு, பொய்களை பரப்பியே ஆட்சி செய்யும் திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் ஆதரவுக்கரம் நீட்டியிருப்பதில் ஆச்சரியம் இல்லை. பொய்யுக்கு பொய் சாட்சி அளித்துள்ளது. இந்திய மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ராகுல் காந்தி. அவரையும், அவரது கூட்டணியையும் பிஹார் மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய மக்களும் நிராகரிப்பார்கள்” என்று வானதி சீனிவாசன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x