Published : 05 Nov 2025 03:09 PM
Last Updated : 05 Nov 2025 03:09 PM
சென்னை: திமுக அரசு மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை மண்ணுக்குள் புதைந்துவிட்டதாக தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் விஜய் தலைமையில் சென்னை அருகே மாமல்லபுரத்தில் இன்று கூடியது. இதில், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வரவேற்புரை ஆற்றினார். இதைத் தொடர்ந்து கரூர் கூட்ட நெரிசலில் சிக்கிய உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் உட்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பொதுக்குழுவின் இறுதியாக விஜய் தலைமையுரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது: நமது குடும்ப உறவுகளை இழந்ததால் சொல்ல முடியாத வேதனையுடனும், வலியுடனும் இத்தனை நாட்களாக நாம் இருந்தோம். அந்தச் சூழலில் அவர்களுடன் சேர்ந்து அமைதி காத்து வந்தோம்.
அமைதி காத்து வந்த நேரத்தில் நம்மைப் பற்றி வன்ம அரசியல் வலைகள், அர்த்தமற்ற அவதூறுகள் பிண்ணப்பட்டன, பரப்பப்பட்டன. இவை அனைத்தையும் சட்டம் மற்றும் சத்தியத்தின் துணைக் கொண்டு நாம் துடைத்தெறியத்தான் போகிறோம்.
அதற்கு முன்பாக தமிழக சட்டமன்றத்தில் நமக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட ஓர் உரைக்கு ஒரு நாகரிக பதிலடி கொடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அரசியல் செய்ய விருப்பவில்லை, அரசியல் செய்ய விருப்பமில்லை என அடிக்கடிச் சொல்லும் முதல்வர், பெருந்தன்மையை பெயரளவில் மட்டுமே பேசும் முதல்வர், 15.10.2025 அன்று தமிழக சட்டப்பேரவையில் நமக்கு எதிராகப் பேசிய பேச்சில் எவ்வளவு வன்மத்தைக் கக்கியுள்ளார் என்பதையும் எப்படிப்பட் ஒரு அரசியலைச் செய்ய முயல்கிறார் என்பதையும் தமிழக மக்கள் உணராமலா இருப்பார்கள்?
கரூரோடு சேர்ந்து 5, 6 மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நாம் நடத்தி இருக்கிறோம். அங்கே எல்லாம் கடைசி நிமிடம் வரை அந்த இடத்தைக் கொடுப்பார்களா மாட்டார்களா என்றே தெரியாது. நான் நாகையில் சொன்னதுபோலத்தான், மக்கள் நெருக்கடி இல்லாமல் இருப்பதற்கு ஏற்ப நாங்கள் ஓர் இடத்தை தேர்வு செய்து கேட்போம். ஆனால், மக்கள் நெருக்கடியோடு நிற்பதற்கு ஏற்ற ஓரிடத்தை தேர்வு செய்து கொடுப்பார்கள். எல்லா இடத்திலும் இப்படித்தான் நடக்கும்.
அதுமட்டுமல்ல, இந்தியாவிலேயே எந்த ஒரு அரசியல் தலைவருக்கும் இல்லாத கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பேருந்துக்குள்ளேயே இருக்க வேண்டும், மேலே வந்து கை காட்டக்கூடாது. இப்படி அதீத கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டபோது இது தொடர்பாக நாங்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டோம். அனைத்து கட்சிகளுக்கும் சமமான முறையான ஒரு பொதுவழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தையும் நாடினோம். இதையும் தமிழக மக்கள் உணராமலா இருப்பார்கள்?
அரசியல் காழ்ப்புணர்வுடன் நேர்மை திறமற்று நம்மைப் பற்றி குற்றம் சாட்டியுள்ள குறுகிய மனம் கொண்ட முதல்வருக்கு ஒரு சில கேள்விகளை முன்வைக்கிறேன். 13.10.2025 அன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்த அந்த விவாதங்களை வைத்தும் உத்தரவுகளை வைத்தும் இந்த கேள்விகளை முன்வைக்கிறேன்.
பொய் மூட்டைகளை நமக்கெதிராக அவிழ்த்துவிட்ட முதல்வருக்கும் திமுக அரசுக்கும் ஆதரவாக வாதாடுவதற்காக கோடிகளைக் கொட்டி அமர்த்தப்பட்ட அறிவார்ந்த வழக்கறிஞர்கள், இந்த கபட நாடக திமுக அரசின் தில்லுமுள்ளுகளை தாங்கிப் பிடிக்க முடியாமல் உச்ச நீதிமன்றத்தில் திக்கித் திணறி நின்றது முதல்வருக்கு மறந்துவிட்டதா?
கரூர் சம்பவத்துக்குப் பிறகு அவசர அவசமாக ஒரு தனி நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த தனி நபர் ஆணையத்தையும் அவமதிக்கும் வகையில் அரசு உயர் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் நம்மைப் பற்றி அவதூறு பரப்பி ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்கள். அவசர அவசரமாக இவை எல்லாம் ஏன் நடக்கிறது? எதற்காக நடக்கிறது? என ஒட்டுமொத்த தமிழக மக்களும் கேள்வி கேட்க தொடங்கினார்கள். இதையும் தமிழக முதல்வர் மறந்துவிட்டாரா? அதன்பிறகு, அந்த தனி நபர் ஆணையத்தையே தலையில் கொட்டி வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். அது வேறு விஷயம்.
இப்படி எல்லாம் கேள்வி கேட்ட உடனேயே, அவற்றுக்கு பதில் சொல்ல வேண்டுமல்லவா? சட்டமன்றத்தில் பேசும்போது உண்மை நிலையை தெளிவுபடுத்த ஏதோ சட்ட ரீதியாகவும் சத்தியத்தின் படியும் பேசுவதாக நினைத்துக்கொண்டு முதல்வர் ஏதேதோ பேசினார். 50 வருடமாக பொது வாழ்க்கையில் உள்ள ஒருவர், ஒரு முதல்வர் எவ்வளவு பெரிய வடிகட்டிய பொய்யைப் பேசியுள்ளார் என்பதை நான் சொல்லவில்லை, உச்ச நீதிமன்றமே சொல்லி உள்ளது.
அரசு காவல் உயர் அதிகாரிகள் ஊடகங்களிடம் பேசியது, நியாயமான விசாரணை நடக்குமா என்ற சந்தேகத்தை பொதுமக்களிடையே ஏற்படுத்தக்கூடும் என்றும் நியாயமான விசாரணையின் மூலம் அந்த சந்தேகத்தை மீட்டெடுத்தே ஆக வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் தலைமையில் ஓங்கி நறுக்கு நறுக்கு நறுக்கென்று கொட்டியதை முதல்வர் மறந்துவிட்டாரா?
சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டார் அல்லவா? அந்த உத்தரவை ஏதோ சட்டத்தின் மீதும் நீதி பரிபாலனத்தின் மீதும் மரியாதை கொண்டவர்கள் போல ஒரு நாடகத்தனமான கொண்டாட்டத்தை திமுகவும் திமுகவுக்கு ஒத்து ஊதுபவர்களும் கொண்டாடி குதூகளித்தார்கள் அல்லவா? தவெகவுக்கு எதிராகவும் நமக்கு எதிராகவும் உயர் நீதிமன்ற நீதியரசர் தீர்ப்பளித்துவிட்டதாக விதந்தோதி விழா எடுத்தனர் அல்லவா?
அந்த உத்தரவைப் பற்றி சொல்லும்போது, எந்த ஆவணத்தின் அடிப்படையில் அந்த உத்தரவு அமைக்கப்பட்டது என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அப்போதும்கூட உச்ச நீதிமன்றத்தில் திமுக அரசுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர்கள் பதில் சொல்ல முடியாமல் வாய்மூடி மவுனம் காத்ததை நாடே பார்த்ததல்லவா? இதையும் முதல்வர் மறந்துவிட்டாரா?
பொது வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் வந்த ரிட் மனுவை நீதிபதிகள் டிவிஷன் பெஞ்ச்தான் கையாள வேண்டும், தனி நீதிபதி கையாளக்கூடாது என உச்ச நீதிமன்றம் சொன்னதல்லவா? அதுமட்டுமா, கோரிக்கையே இல்லாமல் சிறப்பு விசாரணை குழு மைத்தது எந்தவகையில் சரி என்றும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இவை எல்லாமே அறியாமலோ அல்லது அறியாதது போலவோ உச்சபட்ச அதிகார மயக்கத்தில் இருந்து முதல்வர் பேசினாரோ? மனிதாபிமானம், அரசியல் அறம், மாண்பு இவை எதுவுமே இல்லாமல், வெறும் பேச்சில் மட்டுமே பேசிக்கொண்டு அரசியல் ஆதாயம் தேடும் ஆட்டத்தை ஆடத் தொடங்கிவிட்டார் முதல்வர்.
இவை அவர்களுக்கு புதிதா என்ன? 1969க்குப் பிறகு, இன்னும் சரியாகச் சொல்வதென்றால் 1972க்குப் பிறகு இவர்களை கேள்வி கேட்க ஆளே இல்லாமல் போய்விட்டது. இந்த கேள்விகள் எல்லாம் நான் கேட்டதல்ல, உச்ச நீதிமன்றம் கேட்டவை . இதில் இருந்து என்ன புரிய வருகிறது. அரசு நடத்தும் விசாரணை மேல் சந்தேகம் வருகிறது என்றால் அதற்கு என்ன அர்த்தம். உங்கள் மீது நம்பிக்கை இல்லை என்று அர்த்தம். இவை ஏன் எதற்கு என்று முதல்வருக்குப் புரிகிறதா?
உச்ச நீதிமன்றம் சொன்னதால் மட்டுமல்ல, உண்மையாகவும் இந்த அரசு மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை மண்ணுக்குள் புதைந்துவிட்டது. இதுவாவது முதல்வருக்குப் புரிகிறதா? புரியவில்லை என்றால், 2026 தேர்தலில் இந்த திமுக தலைமைக்கு மக்கள் ஆழமாக அழுத்தமாக புரிய வைப்பார்கள். அப்போது கூட இவர்கள் என்ன செய்வார்கள் என்பது தெரியும்தானே. ஐந்து வருடத்துக்கு ஒருமுறை பழக்க தோஷத்தில் ஒரு அறிக்கை வெளியிடுவார்களே, மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம் என்று. அப்படி அறிக்கை வெளியிட்டுவிட்டு அறிவாயலத்தில் ஓடி ஒளிந்து கொள்வார்கள். அவர்களுக்குச் சொல்கிறேன், இப்போதே அந்த அறிக்கையை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
கடந்த பொதுக்குழுவில் சொன்னதைத்தான் நான் மீண்டும் சொல்கிறேன். இயற்கையும் இறைவனும் நம் தமிழக சொந்தங்களின் வடிவில் மாபெரும் மக்கள் சக்தியாக நம் உடன் நிற்கும்போது எம்மக்களுக்கான அரசியலை தடுப்பவர் எவர்? நமக்கு தற்போது வந்துள்ள இடையூறு தற்காலிகமானதே. எல்லாவற்றையும் தகர்த்தெறிவோம், மக்களுடன் கைகோர்த்து நிற்போம், மக்களோடு களத்தில் நிற்போம், நமது பயணத்தில் தடம் மாறவே மாட்டோம்.
இப்போதும் சொல்கிறேன், 2026ல் இரண்டே இரண்டு பேருக்கு நடுவில்தான் போட்டி. ஒன்று திமுக, மற்றொன்று தவெக. இந்த போட்டி இன்னும் வலிமையாக மாறப் போகிறது. 100% வெற்றி நமக்கே. வாகை சூடுவோம். வரலாறு படைப்போம். நம்பிக்கையோடு இருங்கள். வெற்றி நிச்சயம். இவ்வாறு விஜய் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT