Published : 05 Nov 2025 12:11 PM
Last Updated : 05 Nov 2025 12:11 PM

அதிமுகவில் இருந்து என்னிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது: செங்கோட்டையன்

செங்கோட்டையன்

கோவை: “தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கப்பட்ட 250 பக்க கடிதத்தில் முக்கியமான விஷயங்கள் இருக்கிறது, அதை வெளியில் சொல்ல முடியாது. அதிமுகவில் இருந்து என்னிடம் உறுதியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது” என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, உண்மையான அதிமுக இல்லை என தேர்தல் ஆணையத்திடம் சொல்லி இருப்பது எந்த அடிப்படையில் என்ற கேள்விக்கு, “பின்னால் இதுகுறித்து நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். எனது அடுத்தக்கட்ட நடவடிக்கையை பொறுத்திருந்து பாருங்கள். நல்லதே நடக்கும்.என பதிலளித்தார்.

இரட்டை இலை சின்னம் குறித்து விசாரிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்திருப்பது குறித்த கேள்விக்கு, “தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த கடிதத்தில் 250 பக்கம் இருக்கிறது, அதை வெளியில் சொல்ல முடியாது, அதில் முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன. தேர்தல் ஆணையத்திற்கு கொடுத்து இருப்பதை வெளியில் சொல்லக்கூடாது எனவும் விதிகள் இருக்கிறது.” என செங்கோட்டையன் தெரிவித்தார்.

அதிமுக எந்த மாதிரியான குடும்பக் கட்சியாக இருக்கின்றது என்ற கேள்விக்கு, “உங்களுக்கு எல்லாம் தெரியும் , மீடியாவில் வந்து கொண்டு தான் இருக்கிறது, அதை நான் சொல்லத் தேவையில்லை.” என பதிலளித்தார். உங்களை பாஜக இயக்குகிறதா என்ற கேள்விக்கு, “53 ஆண்டுகளாக கட்சியில் இருக்கிறேன், என்னை தனிப்பட்ட முறையில் யாரும் இயக்க முடியாது.” எனத் தெரிவித்தார்.

மூத்த அரசியல்வாதியான உங்களை நீக்கி இருக்கின்றார்களே என்ற கேள்விக்கு, “இது அவரிடம் (எடப்பாடி பழனிசாமி) கேட்க வேண்டிய கேள்வி” என்றார். மேலும், மனோஜ் பாண்டியன் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்திருப்பது அவருடைய விருப்பம் எனவும் அவர் கூறினார்.

அதிமுகவின் குடும்ப ஆதிக்கம் குறித்த கேள்விக்கு, “கட்சியில் மகன் தலையிடுகின்றார், மைத்துனர் தலையிடுகின்றார். மாவட்டத்தில், தொகுதிக்குள் எல்லாம் வந்து கொண்டிருக்கிறனர். கட்சியில் மருமகன் தலையீடும் இருக்கிறது. எங்கெங்கு இயக்குகின்றனர் என்பது ஊடகங்களுக்கு தெரியாதது கிடையாது, அதனால் அதைப் பற்றிச் சொன்னேன். இது மூத்த நிர்வாகிகளுக்கு இடையூறாக இருக்கும்” எனவும் தெரிவித்தார்.

அதிமுக தரப்பிலிருந்து யாராவது பேச்சுவார்த்தை நடத்துகின்றனரா என்ற கேள்விக்கு, “யார் யார் பேசுகின்றனர் என்பது அவர்களுக்கும் எனக்கும் தான் தெரியும். அதை வெளிப்படுத்தினால் அவர்களுக்கும் ஆபத்து இருக்கிறது. பேச்சுவார்த்தை நடப்பது உண்மைதான்” என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x