Last Updated : 05 Nov, 2025 11:56 AM

3  

Published : 05 Nov 2025 11:56 AM
Last Updated : 05 Nov 2025 11:56 AM

''2026-ல் விஜய் முதல்வராக சபதம் ஏற்போம்'' - தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த் பேச்சு

தவெக சிறப்புப் பொதுக்குழு கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த், விஜய், ஆதவ் அர்ஜுனா.

மாமல்லபுரம்: 2026-ல் விஜய் முதல்வராக சபதம் ஏற்போம் என்று மாமல்லபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தவெகவினருக்கு அறைகூவல் விடுத்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் விஜய் தலைமையில் சென்னை அருகே மாமல்லபுரத்தில் இன்று காலை கூடியது. இக்கூட்டத்தில் கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்காக இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதையடுத்து கட்சியின் உறுதிமொழி வாசிக்கப்பட்டது. அதில், “நமது நாட்டின் விடுதலைக்காகவும் நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன். நமது அண்ணை தமிழ் மொழியைக் காக்க உயிர் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும் இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மத நல்லணிக்கம், சமத்துவம் ஆகியவற்றை பேணக்காக்கின்றன பொறு்புள்ள தனி மனிதனாக செயல்படுவேன்.

மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதி பாதையில் பயணித்து என்றும் மக்கள் நலச் சேவகராக கடமையாற்றுவேன் என்று உறுதி அளிக்கிறேன். சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்க பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமாற உறுதிகூறுகிறேன்" என்ற உறுதிமொழியை கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் விஜயலட்சுமி வாசிக்க, அனைவரும் எழுந்து நின்று ஏற்றனர்.

இதையடுத்து, தவெகவின் கொள்கைத் தலைவர்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் வரவேற்புரை ஆற்றிய கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், “எண்ணற்ற சோதனைகளைத் தாண்டி வந்துள்ளோம், இன்று அரசியலின் மையப்புள்ளி விஜய்தான். தவெக தொடங்கி 2 வருடம் 9 மாதம் நிறைவடைந்துள்ளது. ஆனால், நம் தலைவரின் உழைப்பு, அர்ப்பணிப்பு 30 ஆண்டுகளைத் தாண்டியது. இவை அனைத்துக்கும் அடித்தளம் ஒரு தனி நபர்தான்.

நம்முடைய எதிரிகள் ஒன்றைப் புரிந்து கொள்ளவில்லை. இவரை(விஜய்) யாரும் எளிதில் அசைத்துப் பார்க்க முடியாது. ஏனெனில் இவர் தாய்மார்களின் நம்பிக்கை, தமிழ் மண்ணின் நம்பிக்கை. நமது கட்சி சாதாரணக் கோட்டை கிடையாது. இது தொண்டர்களின் உழைப்பால் கட்டப்பட்டுள்ள இரும்புக்கோட்டை. இனி நம் வேலை எதிரிகளை தோல் உரித்துக் காட்டுவதுதான். நாம் புதிய வேகத்துடன் செயல்படப் போகிறோம். மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். அந்த மாற்றத்தை ஏற்படுத்தும் தகுதியும் நேர்மையும் கொண்ட ஒரே கட்சி நமது தவெக மட்டும்தான்.

இது வெறும் பொதுக்குழுக் கூட்டம் மட்டுமல்ல. இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க கூட்டம். ஒரு மாபெரும் இயக்கத்துக்கு கட்டுப்பாடு என்பது மிகவும் முக்கியம். நாம் அனைவரும் தலைவரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும். நமது பலமே நமது கட்டுக்கோப்புதான். அதை சீர்குலைக்க நினைக்கும் எதிரிகளை நாம் அனுமதிக்கக் கூடாது. பெரியவர்களை மதித்தும் இளைஞர்களை அரவணைத்தும் நாம் பயணிக்கப் போகிறோம். இனி ஒரு நொடி கூட நமக்கு ஓய்வு இல்லை. நாம் ஒவ்வொருவரும் கிராமம்தோறும் வீதிதோறும் செல்ல வேண்டும்.

ஆளும் அதிகாரத்தில் இருப்போரின் அவலங்களை எடுத்துரைக்க வேண்டும். நம் கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்து எடுத்துக்கூற வேண்டம். 2026-ல் நம் தலைவர் முதல்வராக அமர்வதற்கு நாம் அனைவரும் சபதம் ஏற்றுக்கொள்ள வேண்டும். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அந்த மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியாக நாம் இருக்கிறோம். அதற்கான தொடக்கம்தான் இந்த சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்.” என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x