Published : 05 Nov 2025 07:10 AM
Last Updated : 05 Nov 2025 07:10 AM
சென்னை: பேருந்துகளில் பயணிகளிடம் சில்லறை கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது என்று, நடத்துநர்களுக்கு, மாநகர போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, மாநகர போக்குவரத்து கழக இணை மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: மாநகர பேருந்துகளில் பயணிகள் ஏறும்போது பயணச் சீட்டுக்கு உரிய சில்லறையுடன் பயணிக்க வேண்டும் எனக்கூறி வாக்குவாதத்தில் நடத்துநர்கள் ஈடுபடுவதாக பயணிகளிடம் இருந்து தொடர்ச்சியான புகார்கள் வருகின்றது.
எனவே, பேருந்துகளில் பயணிகள் ஏறும்போதே பயணச்சீட்டு வாங்க சில்லறை கொடுக்க வேண்டும் என நிர்பந்தம் செய்யக் கூடாது. பயணச்சீட்டைப் பெற பயணிகள் அளிக்கும் பணம் மற்றும் நாணயங்களை பெற்று உரிய மீதி தொகையை வழங்குமாறு மாநகரப் போக்குவரத்து கழக நடத்துநர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
பணிமனைகளில் பணியின் போது நடத்துநர்களுக்கு வழங்கப்படும் முன் பணத்தை பயணிகளுக்கு, பயணச்சீட்டு வழங்கும் போது முறையாக பயன்படுத்த வேண்டும். பயணிகளிடம் சில்லறை தொடர்பான விவாதங்கள் தவிர்த்து, கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்.
இது தொடர்பாக புகார்கள் பெறப்பட்டால் சம்மந்தப்பட்ட நடத்துநர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT