Published : 05 Nov 2025 06:43 AM
Last Updated : 05 Nov 2025 06:43 AM
சென்னை: ‘அத்தியாவசிய தகவல்கள் முழுமையாக இல்லாத விண்ணப்பங்களுக்கு மட்டுமே மறுபிரதி சான்றிதழ்கள் வழங்க காலதாமதம் ஏற்படுகிறது’ என்று தேர்வுத் துறை இயக்குநர் சசிகலா தெரிவித்துள்ளார். தமிழக பள்ளிக்கல்வித் துறையின்கீழ் இயங்கும் தேர்வுத் துறை இயக்குநரகம் சார்பில் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
அந்த தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழ்களையும் இயக்குநரகமே அச்சிட்டு விநியோகம் செய்கிறது. மேலும், அசல் சான்றிதழ்களை இழந்த மாணவர்களுக்கு மறுபிரதி, மதிப்பெண் சான்றிதழ்களின் சான்றிட்ட நகல், புலப்பெயர்ச்சிக்கான சான்றிதழ் ஆகியவற்றையும் தேர்வுத் துறை வழங்குகிறது. இதற்கிடையே இந்த சான்றிதழ்களை தேர்வுத் துறை மாதக்கணக்கில் வழங்காமல் தாமதிப்பதாக புகார்கள் எழுந்தன.
இது குறித்து தேர்வுத் துறை இயக்குநர் கே.சசிகலா வெளியிட்ட செய்திக்குறிப்பு: இணையதளம் வழியே பெறப்படும் விண்ணப்பங்களுக்கான மறுபிரதி சான்றிதழ்கள் தேர்வர்களின் இருப்பிட முகவரிக்கும், இடப்பெயர்வு சான்றிதழ்கள் மாணவரின் இணையதள முகவரிக்கும் உடனடியாக அனுப்பப்பட்டு வருகின்றன.
அதேநேரம் விண்ணப்பிக்கும்போது அத்தியாவசிய தகவல்களான தேர்வெழுதிய மாதம், ஆண்டு, பதிவெண்விவரங்கள் முழுமையாக இல்லாத விண்ணப்பங்கள் பரிசீலனை செய்வதில் இயலாமையும், காலதாமதமும் ஏற்படுகின் றன. வரும்காலத்தில் இவற்றை தவிர்க்க கூடுதல் நடவடிக் கைகள் முன்னெடுக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக் கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 5 ஆண்டுகளில் 13 லட்சத்து 30,389 உண்மைத்தன்மைச் சான்றிதழ்கள், 65,739 மறுபிரதி சான்றிதழ்கள், 13,765 சான்றிட்ட மதிப்பெண் நகல்கள், 38,886 புலப்பெயர்வுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தேர்வுத் துறையின் விளக்கம் ஏற்புடையதாக இல்லை.
அரசின் வலைதளத்தில் மாணவர்கள் தவறான தகவல்களை பதிவேற்ற முடியாது. அவ்வாறு விவரங்கள் தவறாக இருந்தால் மாணவர்களைத் தொடர்புகொண்டு விளக்கம் பெறவேண்டும். விண்ணப்பங்களை மாதக்கணக்கில் கிடப்பில் போடுவதால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது என்று ஆசிரியர்கள், கல்வியாளர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT