Published : 05 Nov 2025 06:22 AM
Last Updated : 05 Nov 2025 06:22 AM
சென்னை: ஆசிரியர்கள், பணியாளர்கள் மீதான போக்சோ வழக்குகளில் விரைந்து விசாரணை நடத்தி முடிக்க வேண்டுமென அலுவலர்களுக்கு, அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவிட்டுள்ளார். தமிழக பள்ளிக்கல்வித் துறையின் அலுவல் ஆய்வுக் கூட்டம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில், சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில் துறை சார்ந்த இயக்குநர்கள், முதன்மை, மாவட்டக் கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அரசின் நலத்திட்டங்கள், பொதுத்தேர்வு மற்றும் பருவமழை கால முன்னேற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
அதன்பின், அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியதாவது: பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டதால், உரிய காலத்துக்குள் பாடப்பகுதிகளை திட்டமிட்டு நடத்தி முடிக்க வேண்டும். மழைக்கால முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஓய்வுபெற்ற அலுவலர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு உரிய பணப் பலன்களை உரிய காலத்தில் வழங்க வேண்டும். கற்றல் அடைவுத் தேர்வில் பெற்ற மாவட்ட தேர்ச்சி அறிக்கையை ஆய்வு செய்து பின்தங்கிய பள்ளிகள் மீது கவனம் செலுத்தி கற்பித்தலை மேம்படுத்த வேண்டும்.
அதேபோல், மாணவர்கள் இடைநிற்றலை கண்காணித்து தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர்கள், பணியாளர்கள் மீதான போக்சோ வழக்குகளில் விரைந்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீண்டகாலம் நிலுவையில் உள்ள 17ஏ, 17பி குற்றச்சாட்டுகள் மீது உரிய வழிமுறைகளை பின்பற்றி விசாரணை மேற்கொண்டு இறுதி ஆணை பிறப்பிக்க வேண்டும். தங்கள் மாவட்டப் பள்ளிகள் சார்ந்த செய்திகள், புகார்களை உடனுக்குடன் கவனித்து உரிய குறைதீர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT