Published : 05 Nov 2025 06:06 AM
Last Updated : 05 Nov 2025 06:06 AM
சென்னை: தமிழகத்தில் பல்வேறு வழிபாட்டுத் தலங்களில் வேண்டுதல்களை நிறைவேற்ற பக்தர்கள் தங்களது தலைமுடியை காணிக்கையாக செலுத்துவது வழக்கம். இந்த தலைமுடியை மொத்தமாக பெறுவதோடு, வேறு வழிகளிலும் தலைமுடியை பெற்று சில தொழில் அதிபர்கள், அவர்களது நிறுவனம் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். இதன் மூலம் அவர்களுக்கு அதிக வருமானம் கிடைக்கிறது.
இந்த தலைமுடி உலகளவில்விக், ஹேர் எக்ஸ்டென்ஷன் உள்ளிட்ட பல்வேறு வகையான சிகை அலங்காரங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிகை அலங்காரங்கள் தயாரிக்க வெளிநாட்டு நிறுவனங்கள் பயன்படுத்தும் மனித தலைமுடி பெரும்பாலும் இந்தியாவிலிருந்து செல்வதாக கூறப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க, அதிக வருமானம் கிடைப்பதால் தலைமுடி இந்தியாவிலிருந்து சட்ட விரோதமாக கன்டெய்னர் லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்டு மியான்மர், வங்கதேசம் மற்றும் நேபாளம் வழியாக சீனாவுக்கு கடத்தப்பட்டு, அங்குள்ள நிறுவனங்கள் இந்த முடியை பயன்படுத்தி விக் தயாரித்து தங்களது பிராண்டுகளின் பெயரில் அவற்றை விற்பனை செய்து பெரும் லாபம் ஈட்டுவதாகவும் கூறப்படுகிறது.
அசாம் தலைநகர் குவஹாட்டியை மையமாகக் கொண்டு இந்த சட்டவிரோத செயல்கள் நடப்பதை அறிந்த அம்மாநில அமலாக்கத் துறை அதிகாரிகள் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தலைமுடி மூலம் கோடிக்கணக்கில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்திருப்பதும், கோயில்களில் இருந்து தலைமுடியை சேகரிக்கும் நிறுவனங்கள் போலி நிறுவனங்களை உருவாக்கி கன்டெய்னர் லாரிகள் மூலம் கடத்தி இந்த மோசடியை அரங்கேற்றி இருப்பதும் தெரியவந்தது.
அமலாக்கத் துறை விசாரணையின் போது தலைமுடியை மொத்தமாக வாங்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வரும் சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கும் இந்த சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் தொடர்பு இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இதைத் தொடர்ந்து சென்னை கோயம்பேடு, நெற்குன்றத்தில் விக் ஏற்றுமதி நிறுவனம் நடத்திவரும் லோகேஷ்வரன் என்பவரது குடியிருப்பு மற்றும் அலுவலகம், அமைந்தகரை மேத்தா நகரில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்திவரும் முனுசாமி வெங்கடேசன் என்பவரின் குடியிருப்பு, கோடம்பாக்கம் வெள்ளாளர் தெருவில் விக் ஏற்றுமதி நிறுவனம் நடத்திவரும் வெங்கடேசன் என்பவர் வசித்து வரும் குடியிருப்பு, அதே பகுதியில் உள்ள மற்றொரு குடியிருப்பிலும் சோதனை நடைபெற்றது. சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “முழுமையான சோதனைக்கு பிறகே எந்த மாதிரியான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்பது குறித்து விரிவான அறிக்கை வெளியிடப்படும்” என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT