Last Updated : 05 Nov, 2025 08:54 AM

13  

Published : 05 Nov 2025 08:54 AM
Last Updated : 05 Nov 2025 08:54 AM

“50 இடங்களுக்கு மேல் வெல்வதே திமுகவுக்கு கடினம்!” - அடித்துச் சொல்லும் அமர்பிரசாத் ரெட்டி

பாஜக மாநிலச் செயலாளர் அமர்பிரசாத் ரெட்டி தமிழகத்தின் அரசியல் கள நிலவரத்தை நன்கு அறிந்தவர். பெயரைக் கேட்டதும் வெளியூர்காரர் என்று நினைப்பவர்கள் ஏமாந்து போகும் அளவுக்கு நன்கு தமிழ் பேசக் கூடியவர். அவரிடம் ‘இந்து தமிழ் திசை’க்காக பேசினோம்.

வலுவான கூட்டணியை அமைப்போம் என பாஜக திரும்பத் திரும்பச் சொன்னாலும் யாருமே பாஜக அணி பக்கம் திரும்புவதாகத் தெரியவில்லையே?

கடந்த காலங்களில் வேட்புமனு தாக்கலுக்கு முந்தைய நாள் கூட கூட்டணிகள் இறுதியாகி இருக்கின்றன. அப்படி இருக்கையில், இப்போது மட்டும் கூட்டணியை இறுதி செய்ய என்ன அவசரம்? டெல்லி மேலிடத்தின் முழு கவனமும் இப்போது பிஹார் தேர்தல் களத்தின் மீது இருக்கிறது. அங்கு தேர்தல் முடிந்ததும் தமிழகத்தில் பாஜக கூட்டணியை வலுப்படுத்தும் வேலைகளைத் தொடங்குவோம். அதன்படி, மிகப்பெரிய கட்சி ஒன்று எங்கள் கூட்டணிக்கு வர வாய்ப்பு இருக்கிறது.

பாஜக-வுடன் கூட்டணி சேர்ந்திருப்பதால் இத்தனை நாளும் அதிமுக-வுக்கு கிடைத்து வந்த சிறுபான்மையினர் ஓட்டுகள் பறிபோகும் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?

2 அல்லது 3 சதவீதம் வாக்குகளை வைத்துள்ள கட்சிகளே தங்களுக்கு சிறுபான்மையினர் ஆதரவு இருப்பதாகச் சொல்கிறார்கள். அப்படி இருக்கையில், 11.5 சதவீதம் வாக்குகளை வைத்திருக்கும் பாஜகவுக்கு சிறுபான்மையினர் ஆதரவு இருக்காதா? சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் கோவா, மிசோரம், மேகாலயா மற்றும் தென் கிழக்கு மாநிலங்களில் பாஜகவின் ஆட்சி தான் நடக்கிறது. பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்ற பொய்யான கருத்து பரப்பப்பட்டு வருகிறது. ஆகவே, எங்களுடன் இருப்பதால் நிச்சயம் அதிமுகவுக்கு பாதிப்பு வராது; பலன் தான் கிடைக்கும்.

பிஹாரிகள் தமிழகத்தில் துன்புறுத்தப்படுவதாக எந்த ஆதாரத்தின் அடிப்படையில் பிரதமர் மோடி பேசியிருக்கிறார்?

வட இந்தியர்களை, பான்பராக் வாயன், வடக்கன், தமிழர்களின் வேலை வாய்ப்புகளை பறிக்கிறார்கள் என்றெல்லாம் விமர்சிப்பது திமுகவினர் தான். இதற்கெல்லாம் எத்தனை வீடியோ ஆதாரங்கள் வேண்டும்... முதல்வர் ஸ்டாலின் பேசியதை காட்டட்டுமா? தமிழகத்திற்கு பெருமளவில் புதிய முதலீடுகள் வராததற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். “என்ன உடையை வேண்டுமானாலும் உடுத்திக் கொள்ளுங்கள். என்ன உணவு வேண்டுமானாலும் உட்கொள்ளுங்கள். ஆனால், ஆந்திராவை வளர்ச்சிக்கு கொண்டு செல்ல வேண்டும்” என ஆந்திராவின் ஐடி அமைச்சர் நாரா லோகேஷ் கூறுகிறார். இப்படி திமுகவால் சொல்ல முடியுமா? தமிழ் மட்டுமே வேண்டும் என்று சொன்னால் கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்ய முடியாது. தமிழும் வேண்டும், ஆங்கிலமும் வேண்டும். அதேசமயம், இந்தி நமக்குத் தெரியவில்லை என்றால், இந்தி தெரிந்தவர்களை உள்ளே அனுமதிக்கவும் வேண்டும்.

விஜய்க்கு பாஜக தரப்பில் மாய்ந்து மாய்ந்து ஆதரவுக் கரம் நீட்ட என்ன காரணம்... கூட்டணிக் கணக்கா?

விஜய்யை அரசியலை விட்டே அகற்ற திமுக திட்டமிட்டு வருகிறது. ஆனால், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரட்டும்; எதிர்த்து நிற்கட்டும் என பாஜக நினைக்கிறது. யாரையும் அழித்து வளர வேண்டும் என பாஜக ஒருபோதும் நினைக்காது. அதனால், பிரச்சினையின் அடிப்படையில் விஜய்க்கு ஆதரவாக நிற்கிறது பாஜக.

தமிழக தேர்தல் களத்தில் பாஜக-வுக்கு சாதகமான அம்சங்களாக எதையெல்லாம் கருதுகிறீர்கள்?

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. புதிய முதலீடுகள் வரவில்லை. வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை. கட்டமைப்புகளை மேம்படுத்தவில்லை. போதைப் பொருள் புழக்கம், சட்டவிரோத மது விற்பனை அதிகரித்துள்ளது. கட்சித் தலைவரை நடு ரோட்டில் வெட்டிச் சாய்க்குமளவுக்கு இருக்கிறது சட்டம் - ஒழுங்கு நிலைமை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஊழல் செய்துகொண்டிருக்கிறார்கள். இது பற்றியெல்லாம் மக்கள் யோசிக்க மாட்டார்களா? ஆகவே, இம்முறை திமுக 50 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவதே கடினம்.

தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள எஸ்ஐஆர் பணிகளை எதிர்த்து திமுக உச்ச நீதிமன்றத்தின் கதவுகளை தட்டி இருக்கிறதே..?

தமிழகத்தில் ஏற்கெனவே 10 முறை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யப்பட்டதே அப்போதெல்லாம் திமுக எங்கே போனது... எஸ்ஐஆரைப் பார்த்து ஏன் அஞ்சுகிறார்கள்? தேர்தலில் தோற்று விடுவோம் என திமுகவுக்கு தெரிந்துவிட்டது. அதனால், இதுபோன்ற ஒரு நாடகத்தை நடத்துகிறார்கள்.

பாஜக-வில் இந்த முறை இளைஞர்களுக்கு தேர்தல் வாய்ப்புகள் வழங்கப்படுமா?

இளைஞர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களை உயர்வான இடத்தில் அமரவைத்து அழகு பார்ப்பது தான் தேசிய தலைமையின் பண்பு. இன்றைக்கு, அதிகமான இளம் எம்எல்ஏ-க்கள், எம்பி-க்கள் உள்ள கட்சி பாஜக தான். அந்தவகையில், இம்முறை கணிசமான இளைஞர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் கிடைக்கும் என நம்புகிறேன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x