Published : 05 Nov 2025 08:25 AM
Last Updated : 05 Nov 2025 08:25 AM
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு, முன்னெப்போதும் இல்லாத வகையில் கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன்பிருந்தே முக்கிய கட்சிகள் ஆயத்தப் பணிகளை தொடங்கிவிட்டன. தற்போது, சமூக வலைதளங்கள் வழியே பிரச்சாரம் செய்யவும், செய்திகளை பரப்பவும், விவாதங்களில் ஈடுபடவும் அனைத்துக் கட்சிகளின் ஐடி விங்குகளும் பரபரப்பாக செயல்பட்டு வருகின்றன.
திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட பிரதானக் கட்சிகள் ஐடி விங் ஆலோசனைக் கூட்டங்களை அடிக்கடி நடத்துகின்றன. ‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’, ‘ஓரணியில் தமிழ்நாடு’ என திமுக ஐடி விங் சமூக வலைதள பரப்புரை மேற்கொண்டு வருகிறது. எதிர்க்கட்சியான அதிமுக ஐடி விங் சார்பில் ‘உருட்டுக் கடை அல்வா’ என நேரம் பார்த்து கோல் போடுகின்றனர். நடுவில், தவெகவின் விர்ச்சுவல் வாரியர்ஸ் செய்யும் அலப்பறைகளும் தூள் பறக்கின்றன. சீமானின் தம்பிகளும் தங்கள் பங்குக்கு கருத்துகளை தெறிக்கவிடுகின்றனர்.
முக்கியமாக, எக்ஸ், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் இயங்கும் அரசியல் கட்சித் தலைவர்களின் தனிக் கணக்கில் பதிவிடும் கருத்துகளுக்கு, கமென்ட் பக்கத்தில் ஆதரிப்பது, எதிர்வினை ஆற்றுவது, விவாதம் செய்வது என கட்சிகளின் ஐடி விங் நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் தூக்கத்தை மறந்து சுழல்கிறார்கள். மேலும், எக்ஸ் பக்கத்தில் தங்கள் கட்சி தலைவர் பேசும் கருத்துகளையும், கட்சியையும் ஹேஸ்டேக் மூலம் டிரெண்டிங்கில் வைத்திருப்பதும் ஐடி விங்குகளின் பிரதான வேலையாக உள்ளது.
தற்போது ரீல்ஸ் மோகம் அதிகரித்துள்ளதால், அதற்கு ஏற்றவாறும் 30 விநாடி ஷார்ட்ஸ் வீடியோக்களாக தயாரித்து அதையும் சுற்ற விடுகிறார்கள். இதேபோல, சமூக வலைதளங்களில் அதிகளவு ஃபாலோவர்ஸ் வைத்துள்ள சோஷியல் மீடியா இன்புளுயன்சர்களையும் அரசியல் கட்சிகள் அணுகி வருகின்றனர். ஒரு நாளைக்கு இத்தனை வீடியோ பதிவு செய்ய வேண்டும், அதை தங்கள் பக்கங்களுடன் ‘கொலாப்’ (Colab) செய்ய வேண்டும், அதிக பார்வையாளர்களை ஈர்க்க வேண்டும், சொல்லும் கருத்தை பதிவிட வேண்டும், வீடியோக்களை வெளியிட வேண்டும் என ஒப்பந்தங்கள் போடப்பட்டு காரியங்கள் நடக்கின்றன.
ஒரு வீடியோவுக்கு இவ்வளவு ரூபாய், வீடியோ சென்று சேரும் பார்வைகளைப் பொருத்து இவ்வளவு ரூபாய் என இதர டீல்களும் நடக்கின்றன. இதைக் கணக்குப் போட்டு இன்புளுயன்சர்களும் தேர்தலை மையப்படுத்தி, தற்போதே தங்கள் சமூக வலைதள கணக்குகளில் அரசியல் சார்ந்த வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இதேபோல் தேர்தலுக்காக புதிது புதிதாய் ஏஜென்ஸிகளும் முளைத்து வருகின்றன. இந்த ஏஜென்ஸிகள் அரசியல் கட்சிகளை அணுகி, அரசியல் திட்டங்கள் வகுப்பது, வெற்றி வாய்ப்பு, உள்ளூர் நிலவரம், கள நிலவரம், யூடியூப் லைவ், சமூக வலைதளங்களில் பதிவு என பேக்கேஜ் பேசும் பணிகளும் தீவிரமடைந்துள்ளன.
சமூக வலைதளங்களின் வீரியத்தை உணர்ந்திருக்கும் முக்கிய அரசியல் கட்சிகள் இந்தத் தேர்தலுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் அந்த ரூட்டுக்கும் கொஞ்சம் கோடிகளை திருப்பத் தயாராகி வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT