Published : 05 Nov 2025 06:54 AM
Last Updated : 05 Nov 2025 06:54 AM
சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக வாக்குச்சாவடி முகவர்களுக்கு பாஜக சிறப்பு பயிற்சி முகாம் அக்கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
சட்டப்பேரவை தேர்தலை யொட்டி வாக்குச்சாவடி முகவர்களுக்கான முதல் மாநில பயிலரங்கம் என்ற வகையில் சட்டப்பேரவைக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கான பயிற்சி முகாம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி, மதுரை, கோவை, சேலம், சென்னை, விழுப்புரம், திருச்சி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 1500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதற்கு கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை, தேர்தல் பொறுப்பாளர்கள் பைஜெயந்த் பாண்டா, சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விளக்கமளித்தனர். வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயர்கள், வெவ்வேறு இடங்களில் வாக்குகளை வைத்திருப்பவர்களின் பெயர்களை நீக்கச் சொல்ல வேண்டும்.

முதல் தலைமுறை வாக்காளர்களை சேர்க்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என முகவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்பட்டது. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் பாஜக தனது முழு ஒத்துழைப்பை வழங்குவது என இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், “தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் மட்டும் போதாது. இந்த பணியில் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கட்சிகளும் முழுமையாக ஈடுபட வேண்டும்” என்றார். இக்கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர்கள் ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் கரு.நாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT