Published : 04 Nov 2025 09:57 AM
Last Updated : 04 Nov 2025 09:57 AM

“தொகுதிகளுக்காக விஜய் பக்கம் போய்விடுமா காங்கிரஸ்?” - இளைஞர் காங்கிரஸ் தலைவர் கே.பி.சூரிய பிரகாஷ் பதில்

எல்லாக் கட்சிகளையும் போல, காங்கிரஸும் இளைஞரணியை தேர்தல் களத்துக்கு தயார்படுத்தி வருகிறது. தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவராக சில மாதங்களுக்கு முன்பு பொறுப்பேற்ற கே.பி.சூரிய பிரகாஷ், இளைஞர் காங்கிரஸ் கட்டமைப்பை வலுப்படுத்த மாநிலம் முழுவதும் இடைவிடாத பிரச்சாரப் பயணத்தில் இருக்கிறார். பிரச்சாரத்துக்கு நடுவே அவரை சந்தித்துப் பேசியதிலிருந்து...

விஜய், சீமானுக்கு பின்னால் இளைஞர்கள் அணிவகுப்பதாக சொல்லப்படும் நிலையில், அவர்களை இழுக்க என்ன செயல் திட்டம் வைத்திருக்கிறீர்கள்?

இளைஞர்கள் அனைவரும் விஜய் – சீமான் பின்னால் அதிகமாகச் செல்கிறார்கள் என்பது ஒரு கட்டமைக்கப்பட்ட பிம்பம் மட்டுமே. அப்படிச் செல்லும் பலர் அரசியல் அனுபவம் இல்லாதவர்களாக சினிமா கவர்ச்சியால் ஈர்க்கப்படுபவர்களாக இருக்கலாம். ஆனால் கொள்கை அடிப்படையில் அரசியல் செய்ய வேண்டும், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கும் இளைஞர்கள் பெரும்பாலும் காங்கிரஸில் தான் இணைகிறார்கள். அவர்களின் வருகையை மேலும் அதிகரிக்க இளைஞர்களுக்கு அரசியல் பயிற்சி பட்டறைகள் நடத்துகிறோம்.

கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக காங்கிரஸால் தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை மீண்டும் அமைக்க முடியாமல் இருப்பதற்கு என்ன காரணம்?

தமிழக அரசியல் சூழல் 1967-க்கு பிறகு வேகமாக மாறியது. காங்கிரஸ் தொடர்ந்து கூட்டணியில் போட்டியிட்டாலும், எங்களின் கனவும், தமிழக மக்களின் கனவும் ‘காமராஜர் ஆட்சி தரம்’ தான். அதனால் கூட்டணி கட்சியின் ஆட்சி, காமராஜர் நிர்வாகத் தரத்தில் இயங்க வேண்டும் என்பதை உறுதி செய்துகொண்டே வருகின்றோம்.

தனித்துப் போட்டியிடும் துணிச்சல் தமிழக காங்கிரஸுக்கு எப்போதுதான் வரும்?

தனித்துப் போட்டியிட்டால்தான் பலம் நிரூபணம் என்பது சரியான அளவுகோல் இல்லை. தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்று நினைக்கும் அனைத்துக் கட்சிகளுமே ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி அமைத்துத்தான் தேர்தலைச் சந்திக்கின்றன. 2019, 2024 மக்களவை தேர்தல்கள், 2021 சட்டப்பேரவை தேர்தல்களில் நாங்கள் சேர்ந்திருக்கும் கூட்டணி அபார வெற்றிபெற்றது. நாங்கள் போட்டியிட்ட தொகுதிகளிலும் பெரும்பாலான தொகுதிகளில் வென்றோம். இதுவே எங்கள் பலம் தான்.

திமுகவிடம் இம்முறை கூடுதல் தொகுதிகளைக் கேட்கவேண்டும் என காங்கிரஸார் சொல்வது சாத்தியமாகுமா?

எந்தக் கட்சியினருக்குமே தங்களது கட்சி அதிகமான இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதுதான் ஆசை; இலக்காக இருக்கும். அந்த ஆசை காங்கிரஸாருக்கும் இருப்பதால் அதை வெளிப்படுத்தியுள்ளனர். அதை மாநிலத் தலைமை பார்த்துக் கொள்ளும்.

எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்காவிட்டால் விஜய்யுடன் காங்கிரஸ் கூட்டு வைக்கும் என்று சொல்லப்படுகிறதே..?

எங்கள் இண்டியா கூட்டணி என்பது வெறும் தேர்தல் கூட்டணி அல்ல. இது ஒரு கொள்கைக் கூட்டணி. இந்திய மக்கள் ஒருபோதும் பிரித்தாலும் சூழ்ச்சிக்கு இரையாகி விடக்கூடாது. இந்தியாவில் அனைத்து சமூக மக்களும் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்பதில் எங்கள் கூட்டணி உறுதியாக உள்ளது. எங்கள் மாநில தலைவர், தொண்டர்கள் மன நிறைவடையும் வகையில் தொகுதி உடன்பாட்டை சுமுகமாக முடிப்பார்.

திராவிட மாடல் அரசு குறித்து காங்கிரஸ்காரராக உங்களின் மதிப்பீடு என்ன?

ஆளும் அரசை பற்றிய எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டில் மக்கள் நலன் இல்லை. அவர்களின் சுயநலம் தான் இருக்கிறது. தமிழக அரசு சமூக நீதி, சமவாய்ப்பு, கல்வி, ஆரோக்கியம் உள்ளிட்ட பல மக்கள் முன்னேற்றத் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதற்கு எங்கள் ஆதரவு எப்போதும் இருக்கும்.

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலையின் மர்மங்கள் ஓராண்டும் கடந்தும் விலகியபாடில்லையே?

எந்த ஒரு வழக்கிலும் உண்மையை அறிய வேண்டும் என்றால் தீவிர விசாரணை அவசியம். அது தமிழக காவல்துறையினால் நிச்சயமாக சீராக நடைபெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவர்களுக்கு கால அவகாசம் நிச்சயமாக வழங்கப்பட வேண்டும். அவசரப்படுவதில் பயனில்லை.

தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சியைக் கொண்டுவர முடியும் என நம்புகிறீர்களா?

அது எங்கள் ஆசை மட்டுல்ல... மக்களின் ஆசையும் கூட. அதை எங்கள் கூட்டணி அரசு நிறைவேற்றும்.

தமிழகத்தில் காங்கிரஸ் தேய்ந்து கொண்டே வருகிறது... பாஜக வளர்ந்து கொண்டே வருகிறதே..?

எங்கே பாஜக வளர்ந்திருக்கிறது? 2014 மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணிக்கு 18.8 சதவீத வாக்குகள் கிடைத்தன. 2 எம்பி-க்கள் வெற்றி பெற்றனர். 2024 மக்களவை தேர்தலில், பாஜக கூட்டணி பெற்ற வாக்கு 18.28 சதவீதமாக குறைந்துள்ளது. ஒரு தொகுதியிலும் வெற்றிபெறவில்லை. ஆனால், 2019 தேர்தலில் காங்கிரஸ் 8 இடங்களிலும், 2024-ல் 9 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x