Published : 04 Nov 2025 07:17 AM
Last Updated : 04 Nov 2025 07:17 AM
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை வட்டத்தில் உள்ள கோவிலூர் கிராமத்தில் பழமைவாய்ந்த ஆதி சிவன் கோயில் உள்ளது. இந்த கோயில் மூன்றாம் ராஜராஜசோழன் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சிவன் கோயில் கருவறை திருமூலநாதர் சந்நிதி மற்றும் ராஜகோபுரம் உள்ளிட்டவை பல ஆண்டுகளாக சிதிலமடைந்த நிலையில் இருந்தன.
இந்நிலையில் தமிழக அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூ.2.49 கோடி மதிப்பில் தற்போது புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, திருமூலநாதர் கருவறையில் கட்டுமானப் பணி மேற்கொள்ள ஊழியர்கள் நேற்று காலை பள்ளம் தோண்டியபோது பள்ளத்திலிருந்த ஒரு சிறிய பானையில் 103 தங்க நாணயங்கள் இருந்தன. உடனே இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற உதவி ஆணையர் சண்முகசுந்தரம், தங்க நாணயங்களைக் கைப்பற்றி, செயல் அலுவலர் சிலம்பரசனிடம் ஒப்படைத்தார். அவை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த தங்க நாணயங்கள் எந்த காலத்தைச் சேர்ந்தது என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT