Published : 04 Nov 2025 09:59 AM
Last Updated : 04 Nov 2025 09:59 AM

‘எதிர்க்கட்சி எம்எல்ஏவா இருந்தப்ப இல்லாத பிரச்சினை இப்ப என்ன?’ - மக்களிடம் மல்லுக்கட்டிய பழனிவேல் தியாகராஜன்

அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், ஹாட்ரிக் வெற்றிக் கனவுடன் மதுரை மத்திய தொகுதியில் இம்முறையும் போட்டியிட தயாராகி வருகிறார். அதற்கு ஏதுவாக, வாரா வாரம் மாநகராட்சி அதிகாரிகளுடன் தொகுதிக்குள் சென்று மக்களை சந்தித்து வருகிறார்.

பொதுவாக தியாகராஜன், தான் பேசுவதை மற்றவர்கள் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தால் தொடர்ந்து பேசுவார். யாராவது குறுக்கே புகுந்து குட்டையைக் குழப்பினால் பொசுக்கென கோபப்பட்டு அங்கிருந்து நடையைக் கட்டிவிடுவார். அப்படித்தான் ஆரப்பாளையம் பகுதியில் அண்மையில் மக்கள் சந்திப்பின் போது, அவருக்கும், அங்கு வசிக்கும் மக்களுக்கும் மல்லுக்கட்டாகிப் போனது.

அமைச்சர் விசிட் என்றதும் குறைகளோடு வந்து நின்ற மக்கள் ‘‘எல்லாமே நீங்க நல்லாத்தான் பண்றீங்க சார்... அப்டியே இந்த சாக்கடையவும் சரி பண்ணுங்க சார்” என்றனர். அதற்கு, “அமைச்சர் என்ன சொல்ல வாராருன்னு முதல்ல கேளுங்க” என்று அமைச்சரோடு வந்தவர்கள் மக்களைச் சாந்தப்படுத்தினர். அதை சட்டை செய்யாத மக்கள், சாக்கடை சமாச்சாரம் தொடர்பாக அமைச்சருடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் வழக்கம் போல கோபப்பட்டுப் போன அமைச்சர், ‘‘நீங்க இப்டியே பேசிக்கிட்டே இருங்க... நான் வாரேன். நான் கேட்கிற கேள்விக்கு நீங்க அடிப்படையா யாரும் பதில் சொல்லல. போன ஆட்சியில நான் எதிர்கட்சி எம்எல்ஏ-வா இங்க இருந்தேன். அப்பெல்லாம் இந்தப் பிரச்சினை இல்லை.

இப்ப நாங்க ஆளுங்கட்சியா இருக்கிறோம். அன்றைக்கு இல்லாத பிரச்சினை இன்றைக்கு என்ன இருக்குன்னு நான் கேட்கிறேன்? அன்றைக்கு இருந்தது என்ன மாறியிருக்கு... வாக்கு எண்ணிக்கை அதிகரிச்சிருக்கா... ஆட்கள் எண்ணிக்கை அதிகரிச்சிருக்கா... அப்ப இல்லாத பிரச்சினை புதுசா இப்ப மட்டும் என்ன வந்திருக்கு?” என்றார். இதைக் கேட்டு, அமைச்சர் என்ன நினைக்கிறார் நம்ம என்ன பதில் சொல்றது என்று தெரியாமல்மக்கள் சற்றே குழம்பிப் போனார்கள்.

“அமைச்சரோட மொழிநடை மக்களுக்குப் புரியல. அடித்தட்டு மக்களோட பேச்சு வழக்கு மொழி அமைச்சருக்கு சரியா புரியல. கடைசி வரை, மக்களோட பிரச்சினை என்னன்னே அமைச்சருக்கும் முழுசா தெரியல... அமைச்சர் என்ன சொல்ல வர்றாருன்னு மக்களுக்கும் புரியல” என அமைச்சருடன் வந்தவர்களும் தலையை பிய்த்துக் கொள்ளாத குறையாக கலைந்து சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x